நாளிதழ்களில் வண்ண வண்ண விளம்பரங்கள் சிறப்பு தள்ளுபடிகளை சகஜமாய் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகளும் தங்கள் பங்குக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு நேயர்களை தங்கள் பக்கம் இழுக்க போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. ஹோட்டல்களும் சிறப்புக் கொண்டாட்டங்களுக்காக தேனூற கூவி கூவி அழைப்பு விடுக்கின்றன. இளவட்டங்களை தங்கள் வசப்படுத்த செல்பேசி நிறுவனங்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்ப சிறப்பு சலுகைகளை குறுஞ்செய்திகளாக அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
உலகமே ஆவலோடு மகிழ்ந்து கொண்டாடவிருக்கும் புத்தாண்டு விழா களைகட்ட தொடங்கி விட்டதன் அறிகுறிதான் இவை.
கடக்கும் ஆண்டின் இறுதி நொடிக்கும் புதிய ஆண்டின் ஆரம்ப நொடிக்குமான கொண்டாட்டம்தான் இவ்விழா.
இதற்காகதான் முற்பகுதியில் நான் குறிப்பிட்ட அத்தனை ஏற்பாடுகளும்.
வருடத்திற்கு ஒருமுறை இது வாடிக்கை என்ற நிலையில் அவரவரின் மனநிலைக்கேற்றபடி கொண்டாட்டங்கள் இருக்கும்.
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அந்த இறுதி நொடிப்பொழுதை ஆண்டவனின் பாதத்தில் அர்ப்பணித்து கடந்த ஆண்டில் தாங்கள் பெற்ற உயர்வை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறி புதிய ஆண்டை வரவேற்பர்.
வாழ்க்கை வாழ்வதற்கே, ஆடும் வரை ஆட்டம், உலகம் பிறந்தது எனக்காக என்றிருப்பவர்கள் டாஸ்மாக் கடைகளிலோ, ஆடம்பர ஹோட்டல்களிலோ குடித்து வெறித்து புத்தாண்டை வரவேற்பதாக நினைத்து மண்ணில் தலைக்குப்புற வீழ்ந்துக் கிடப்பர்.
(காவல்துறை பல்வேறு கட்டுபாடுகளை விதித்தும், ஆடம்பர ஹோட்டல்களுக்கு ஏகப்பட்ட விதிமுறைகளை கூறி அவற்றை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம்)
இன்னும் சிலரோ போதை தலைக்கேறிய நிலையில் டூவீலரை தாறுமாறாக ஓட்டி வழியில் காண்போருக்கு வாழ்த்து கூறுவதாக நினைத்துக் கொண்டு என்ன சொல்கிறோம் என்பதுகூட தெரியாமல் உளறி எங்கேயாவது மோதி புத்தாண்டை மருத்துவமனைகளில் கொண்டாடுவர்.
இளசுகளோ கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தும் வகையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பேயாட்டம் ஆடி மகிழ்வர்.
இத்தனை வகையான கொண்டாட்டங்களிலும் ஒரே எதிர்பார்ப்பு மகிழ்ச்சி மட்டுமே. மகிழ்ச்சியை அடைவதற்கு மனிதன் எத்தனையோ வகைகளை கையாள்கிறான்.
எல்லா உயிரினங்களுக்கும் மகிழ்ச்சி என்பது இறைவனால் அருளப்பட்ட ஒன்றாகும். ஆறரறி கொண்ட மனிதன் மாத்திரம் அது தனக்கு மட்டுமே சொந்தம் என்பதை போல உரிமைக் கொண்டாடி அதை பல இடங்களில் தேடி அலைந்துக் கொண்டிருக்கிறான்.
இதுபோன்ற வீணான கொண்டாட்டங்களில் கிடைக்கும் சிறிது நேர மகிழ்ச்சியை நிரந்தரம் என நினக்கிறான். உலகில் இன்றைக்கு பெரும்பாலானோர் மகிழ்ச்சியை தேடி தவறான பாதையில் ஓடி வீணாகிறார்கள்.
வீட்டில் மனைவி, பிள்ளைகளை சாப்பாட்டிற்கு தவிக்க விட்டுவிட்டு டாஸ்மாக் கடைகளிலும், ஆடம்பர ஹோட்டல்களிலும் பணத்தைக் கொடுத்து மகிழ்ச்சியையும், இன்பத்தையும் தேடி சாக்கடைகளில் வீழ்ந்துக் கிடக்கின்றனர்.
பெற்றோரின் பேச்சை கேட்க மறுத்து, அவர்களை உதாசீனப்படுத்தி விட்டு வீண் பெருமைக்காக இதுபோன்ற கொண்டாட்டங்களில் பிள்ளைகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இது உண்மையான மகிழ்ச்சியா?
உண்மையான மகிழ்ச்சி எங்கிருக்கிறது?
திரும்பும் பக்கமெல்லாம் மகிழ்ச்சிக் கொட்டிக் கிடக்கிறது. எத்தனையோ நேரங்களில் என்னை எடுத்துக்கொள் என்று அது கண்சிமிட்டி அழைக்கிறது. நமக்கு அது தெரிந்தாலும் நாம்தான் அதை எடுத்துக்கொள்ள மறுக்கிறோம்.
ஒர் ஆண்டைபோலவே ஒவ்வொரு நாளும் பிறக்கிறது. கண் விழிக்கும் நொடி, அதைத் தொடர்ந்து வரும் நிமிடம், மணிநேரம், பொழுது என எல்லாம் இன்பமானவையாகவே இருக்கிறது.
கவலை சிறிதுமில்லாத சிரித்து மகிழும் குழந்தையின் முகத்தில், நம் மீது வீசி செல்லும் காற்றில், அழகான மலர்களில், மனதை வருடும் இனிய இசையில் என நம்மைச் சுற்றி கொட்டிக் கிடக்கும் மகிழ்ச்சியை அந்த நாள் முழுவதும் அனுபவிக்க ஏன் முயற்சி செய்ய மறுக்கிறோம்.
நாளின் முடிவில் அதாவது படுக்கைக்கு போகும் முன்பு அந்த நாளில் நிகழ்ந்தவைகளை ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்ப்போம். மகிழ்ச்சியான தருணங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
(நீதிமொழிகள் 21:23) தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான் என்னும் வேத வாக்கினை இதயத்தில் நிறுத்தி,
அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தால், அவர்களின் மகிழ்ச்சிக்கு குந்தகம் விளைவித்திருந்தால் இறைவனிடம் மன்னிப்பு கேட்போம். மனதில் பாரமின்றி தூங்க செல்வோம்.
ஒவ்வொரு நாளின் முடிவில் இப்படி சுய பரிசோதனை செய்வோம். தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து விடுவோம்.
நாசியில் சுவாசத்தோடு மீண்டும் ஒரு புதிய நாளுக்குள் நுழைவோம். இப்படி செய்வதால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ள் முடியும்.
புத்தாண்டை மகிழ்ச்சிக்காக கொண்டாடுவோரே, இந்த நொடியில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி, இன்பத்தை அந்த ஆண்டு முழுவதும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?
நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் வெறும் சடங்கிற்காக வாழ்த்துவதை தவிர்த்து காணும் போதெல்லாம் அவர்களை மனதார வாழ்த்துவோம்
புதிய ஆண்டை வரவேற்று கொண்டாடவிருக்கும் நாம் இவைகளை மனதில் நிறுத்துவோம்.
மகிழ்ச்சியை பற்றி நினைப்போம். மகிழ்ச்சியாக இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுவோம். மகிழ்ச்சியை நம்புவோம். மகிழ்ச்சியை நிலை நிறுத்துவோம். அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்போம்.
"செய்வதற்குச் சில, நேசிப்பதற்குச் சில, மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில, இவைகளே மகிழ்ச்சியின் உன்னத அத்தியாவசியத் தேவைகள்." - Allan K. Chalmers
"செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை." - Benjamin Disraeli
உன்னுடைய உழைப்பும் சொற்களும் உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில் மகிழ்ச்சி வருகிறது. – Buddha

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக