வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. !

13 ஜூலை 2012

உறவின் வாசம்


நல்லதோர் குடும்பம்



கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தேன். என் மகன் வயதை ஒத்த இளைஞர் ஒருவர் என் அருகில் அமர்ந்தார். பயணம் தொடங்கியது.
திடீரென்று அந்த இளைஞர் என்னிடம் பேச தொடங்கினார்.
திருவண்ணாமலைக்குத் தானே வர்றீங்க என்ற அவரின் கேள்விக்கு தலையை ஆட்டி பதிலளித்தேன்.
நாம் பேச நினைத்தாலும் பெரும்பாலான இளைஞர்கள், போய் சேரும் வரை வாயை மூடிகிட்டு வாய்யா என்பது போல பார்ப்பார்கள்.  அதனால் இந்த இளைஞரின் அணுகுமுறை எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நானும் அவருடன் பேச தொடங்கினேன்.
தம்பி என்ன வேலையா திருவண்ணாமலைக்கு வர்றீங்க? என்று கேட்டேன்.
கல்லூரியில் நான்கு நாட்கள் விடுமுறை விட்டிருக்கிறார்கள். என் வீட்டுக்கு போய் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தார். அவரின் குடும்பம் குறித்து கேட்டேன். விரிவாக பேசினார். வியப்போடு அவரை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்பா ஓர் விவசாயி. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் அழிந்து வருவதால், அப்பா ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார்அப்பாவுக்கு உதவியாக அம்மா. மொத்தம் நான்கு பிள்ளைகள். மூன்று அண்ணண்கள். நான் கடைக்குட்டி. அண்ணன்கள் அனைவரும் இன்ஜினியர்கள். பல்வேறு மாநிலங்களில் வேலைப் பார்க்கிறார்கள். கை நிறைய சம்பளம். நான் சென்னையில் தங்கியிருந்து எம்.பி.. படிக்கிறேன். இதுபோல விடுமுறை கிடைக்கும்போது ஊருக்கு போய் அம்மா, அப்பாவை பார்த்துவிட்டு வருவேன்.
என் அப்பா எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். அதனால் தானோ என்னவோ எங்களை இந்த அளவிற்கு படிக்க வைக்கிறார். வாழ்க்கை நடத்த கஷ்டப்பட்ட நிலையிலும் என் பெற்றோர் எங்களை உயர்த்தி இருக்கிறார்கள். அண்ணன்களும் என்னை அன்பாய் பார்த்துக் கொள்கிறார்கள். அப்பாவின் பாரத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டு என் படிப்புக்கு உதவி செய்கிறார்கள். அண்ணன்களுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு எங்களைப் போன்றே பாசமுள்ளவர்கள்  மனைவிகளாக அமைய வேண்டும் என்று கூறினார்.
(அவரின் ஆதங்கத்தை நிச்சயமாக இறைவன் நிறைவேற்றுவார் என்று நான் கூறியதும் சந்தோஷ் என்ற பெயர் கொண்ட அவரின் முகத்தில் ஒருவித சந்தோஷ ரேகை ஓடியதைக் கண்டேன்)
அவரின் பேச்சிலிருந்து அந்த குடும்பம் மிகவும் பாசமான குடும்பம் என்பதை உணர்ந்துக் கொள்ள முடிந்தது.
பிறகு என்னைக் குறித்த விவரங்களை கேட்டு தெரிந்துக் கொண்டார்.
சிறிதுநேரம் இருவரும் அமைதியானோம்.
அதன்பிறகு, உலக வாழ்க்கையில் எந்தெந்த வழிகளில் எல்லாம் இளைஞர்களுக்கு ஆபத்தும், அழிவும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன என்பது குறித்து பேசினோம். கல்வியில் தொடங்கி செல்போன், இண்டர்நெட், ஆன்மிகம், காதல், சினிமா, மீடியாக்கள், அரசியல் என ஒவ்வொன்றையும் பிரித்து மேய்ந்தோம்.
அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது.
ஒரு ஆசீர்வாதமான குடும்பத்தை கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். அதற்காக கடவுளுக்கு நன்றி சொல். எந்த சூழ்நிலையிலும் அப்பா, அம்மா மனம் நோகும்படி நடந்து கொள்ளாதீர்கள். அவர்களின் தியாகத்தையும் மறந்து விடாதீர்கள். இப்படி செய்தால் உங்களுக்கு மேலும் ஆசீர்வாதமாகவே இருக்கும். உங்களை குறித்து மனவேதனை அடைந்தால் அது உங்களுக்கு சாபமாக மாறிவிடும் என்று அறிவுரையும், வாழ்த்தையும் கூறினேன். இறுதியில் அவர் விடைபெறும் போது, அப்பாவோடு பேசிக் கொண்டு வந்ததைப் போன்றிருந்ததாக கூறியதும் வியப்பின் விளிம்பிற்கே சென்று விட்டேன்.
கனத்த இதயத்தோடு  ஒரு மகனை விட்டு தந்தையும், தந்தையை விட்டு மகனும் பிரிவதைப் போன்ற உணர்வோடு இருவரும் பிரிந்தோம்.