சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதிலும் தற்போது அதிகம் பேசப்படும் விஷயம் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதுதான்.
போலீசார் சுட்டுக் கொன்றது சரியில்லை என சிலரும், சரி என பலரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து அரசின் சம்பிரதாய நடவடிக்கைகள் ஒரு பக்கம் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம் இது மனித உரிமை மீறல் என குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும், இன்னும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இன்று பகல் 12 மணியளவில் (அரசின் ஒருமணி நேர மின்வெட்டின்போது) எனது அலுவலகத்தில் நானும், ஆசிரியர் திரு.யாணன் மற்றும் அய்யா தமிழ்மறையான் அவர்களும் பேசிக் கொண்டிருந்தோம்.
என்ன தலைவரே சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 4 பேரின் உடல்கள் அடையாளம் தெரியலையாமே? பீகார் முதலமைச்சர் கூட இதுபற்றி என்னவோ சொல்லியிருக்கிறாரே என நான் ஆரம்பித்தேன்.
ஆமாங்க, ஒருத்தனையாவது உயிரோடு பிடித்திருக்கலாம் என அய்யா தமிழ்மறையானும் தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்.
அய்யா, இது சரியான தண்டனைதான் என்றார் ஆசிரியர் யாணன்.
செத்தவர்களைப் பற்றிய எல்லா தகவல்களையும் சேகரித்துக் கொண்ட பிறகுதான் போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
உங்க கருத்துப்படி, மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை உயிரோடு பிடித்து வழக்குப் போட்டார்கள். காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் கொலை வழக்கில் ஜெயேந்திரர் மீதும் வழக்குப் போடப்பட்டிருக்கிறது. இதுபோல் எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேர விரயம், பண விரயம் என இழுத்தடிக்கப்படுகிறது.
மலேசியாவில் கடந்த தைப்பூச நாளில் தமிழகத்திலிருந்து பிழைக்கச் சென்ற இரண்டு இளைஞர்களுக்கு இடையே போதையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரின் உடல் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைக் கைது செய்தனர். இந்த வழக்கு ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டு கொலையாளி தூக்கிலிடப்பட்டார். இது சரியான தண்டனைதான் என ஒரு பத்திரிகையின் தலையங்கத்தில் எழுதியிருந்ததை தான் படித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சில கருத்துக்களையும் ஆசிரியர் தெரிவித்தார்.
அதற்குள் மின்தடை சரியாகி விடவே மற்ற பணிகளை மேற்கொண்டோம்.
பணி முடிந்து வீடு திரும்பினேன்.
பகலில் நாங்கள் பேசிக் கொண்ட விஷயம் குறித்து சிந்தித்தேன். வேதனையாகத்தான் இருந்தது.
சென்னையில் வசிப்பவர்கள் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி பணத்தைச் சேர்த்து வைத்து வங்கியில் செலுத்துகின்றனர். கொஞ்சமும் ஈவு இறக்கமின்றி துப்பாக்கி முனையில் அந்தப் பணத்தைக் கொள்ளையடித்துச் செல்லும் மனப்போக்கு உள்ளவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்?. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தண்டனை தேவைதான்.
ஒருவேளை அவர்களை உயிரோடு பிடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வழக்கு ஆண்டுக்கணக்கில் நடந்திருக்கும். குற்றம் நிரூக்கப்பட்டால் சிறை தண்டனை கிடைத்திருக்கும். தண்டனை முடிந்து வெளியே வந்து அவன் ஒரு புத்தனாகவோ, இயேசுவாகவா மாறியிருப்பானா என்றால் நிச்சயம் மாறியிருக்க மாட்டான். அவன் அடுத்த கொள்ளைக்கு தன்னை தயார்படுத்தி ஈடுபடுவான். அதற்கும் மேலாக கொலைகளைக் கூட மிக எளிதாக மேற்கொள்வான்.
இந்த இடத்தில் ஒன்றை நான் சொல்லியே ஆக வேண்டும். நான் குடியிருக்கும் பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்கள், ஆட்டோவில் இருக்கும் பேட்டரிகள் திருடப்படுகின்றன. இன்னும் கேவலமாக குறிப்பிட வேண்டுமானால் சைக்கிளில் உள்ள பிரேக் கட்டைகள் கூட திருடப்படுகின்றன.
ஆட்டோவில் பேட்டரி திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கச் சென்றபோது, உனக்கு யார் மீதாவது சந்தேகமாக இருந்தால், அவன் பெயரை எழுதிக் கொடு. நடவடிக்கை எடுக்கிறோம் என புகார் கொடுக்கச் சென்றவரிடம் போலீசார் கூறுகின்றனர்.
இதனால் எங்கள் பகுதியில் பொருட்கள் திருட்டுப் போனாலும் பலர் போலீசாரிடம் செல்ல விரும்புவதில்லை. இது திருடர்களுக்கு சாதகமாக போய் விடுகிறது.
ஒருவேளை போலீசார் வங்கிக் கொள்ளையர்கள் மீது என்கவுண்டர் நடத்தாமல் இருந்திருந்தால், எங்கிருந்தோ வந்தவர்கள் இங்குள்ள வங்கியில் கொள்ளையடிக்கும் போது நான் ஏன் அதை செய்யக்கூடாது என்ற எண்ணம் சைக்கிள் பிரேக் கட்டை திருடனுக்கும் வருமல்லவா?
தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும். அதற்கான தண்டனையும் அவன் அடையணும்.
குற்றம் செய்தவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவன் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நமது நாட்டில் இப்போது இருக்கும் சட்டங்களே போதும். அவற்றை முறையாக பயன்படுத்தினாலே குற்றங்களை மேற்கொள்பவர்கள் தங்களை திருத்திக் கொள்வார்கள்.

