
ஒரு ஊரில் மிகப்பெரிய பணக்காரர் வசித்து வந்தார்.
அந்த ஊரில் அவர் சொல்வதுதான் சட்டம்.
ஊரில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த அளவிற்கு செல்வாக்குப் படைத்தவர்.
அந்த ஊருக்கு ஒரு ஞானி வரப் போபாவதாக செய்தி பரவியது.
சேதியறிந்த பணக்காரர், ஞானியை வரவேற்பதற்கு முதல் ஆளாக நின்று கொண்டிருந்தார்.
ஞானியும் வந்தார். பணக்காரர் அவருக்கு விலை உயர்ந்த மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு தனது பிரதாபங்களை ஞானியிடம் எடுத்துக் கூறி தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அவரோ வர மறுத்தார். நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் ஞானியும் பணக்காரரின் வீட்டிற்குச் சென்றார்.
அவரை உபசரித்த பணக்காரர், என்னிடம் நிறைய பணமும், தங்கமும், வெள்ளியும் உள்ளன. உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். அது எவ்வளவு விலையாக இருந்தாலும் சரி, என்னிடம் இல்லாவிட்டாலும் அதனை எங்கிருந்தாலும் பெற்று வந்து தருவதற்கு என்னால் முடியும் என்று பெருமையாக கூறி கொண்டார்.
எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று கூறிய ஞானியை, பணக்காரர் தொடர்ந்து வற்புறுத்தினார்.
அவரின் தொல்லை தாளாமல், காதறுந்த ஊசி ஒன்று வேண்டும். அதை மட்டும் எடுத்து வா என்றார் ஞானி.
பணக்காரர் அதிர்ச்சியடைந்தார்.
ஞானியை மேலும், கீழும் பார்த்தார்.
என்ன செய்வது வாக்கு கொடுத்து விட்டோமே, அதை தராமல் விட்டால் தன்னைப் பற்றி ஞானி என்ன நினைப்பார் என்று சிந்தித்தப்படியே ஒரு காதறுந்த ஊசியை கொண்டு வந்து ஞானியிடம் கொடுத்தார்.
அதை அவர் பெற்றுக் கொண்டார்.
இந்த காதறுந்த ஊசியை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என பணக்காரர் ஞானியிடம் கேகட்டார்.
இது உனக்குக் கொடுக்கத்தான் என்றார் ஞானி.
பேரதிர்ச்சியால் தாக்குண்ட பணக்காரர், எனக்கு எதற்கு என்று மீண்டும் கேட்டார்.
இப்போது இந்த ஊசியை வைத்துக் கொள். மரணத்திற்கு பிறகு வேறு ஒரு உலகத்தில் என்னை சந்திக்கும்போது இதை என்னிடம் கொடுத்தால் போதும் என்றார் ஞானி.
அது எப்படி சாத்தியமாகும்? என்று கூறிக் கொண்டே பணக்காரர் கேலியாக சிரித்தார்.
என்னப்பா எவ்வளவோ பணம் வைத்திருக்கிறாய்? ஊரில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றிருக்கிறாய். இந்த ஊசியை உன்னால் எடுத்து வர முடியாதா? என்று ஞானியும் சற்றே கிண்டலாக கேட்டார்.
அதெப்படி முடியும் சாமி, இறந்த பிறகு என்னால் எதையும் எடுத்துச் செல்ல முடியாதே, அப்படியிருக்கும் போது இந்த ஊசியை எப்படி எடுத்து வர முடியும் என்றார் பணக்காரர்.
உயிர் உன்னை விட்டு பிரியும் போது ஒரு காதறுந்த ஊசியைக் கூட எடுத்து வர முடியாத நிலையிலிருக்கும் உனக்கு, எத்தனை செல்வாக்கிருந்தும், சொத்து- பத்து இருந்தும் என்ன பயன்?
இந்த உலகை விட்டு போகும் போது நீ செய்த புண்ணியமும், பாவமும்தான் உன்னோடு வரும். இப்போதாவது இதனை புரிந்துக் கொள். வீண் பெருமிதம் கொள்ளாதே என்று கூறி விட்டு அமைதியாக சென்றார் ஞானி.
பரிசுத்த வேதாகமத்திலும் இதுகுறித்து எழுதப்பட்டிருக்கிறது.
இயேசு பின்னும் அவர்களை (தனது சீடர்களை) நோக்கி, பிள்ளைகளே ஐஸ்வரியத்தின் மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. ஐஸ்வரியவான் தேவனுடைய ராஜ்ஜியத்தில் நுழைவதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். (மாற்கு 10 : 24,25)
‘காதற்ற ஊசியும் வாராதுகாண் நும்கடை வழிக்கே ’
என்ற பட்டினத்தார் பாடலை கேட்டிருப்போம்.
அதன் பொருள் என்னவென்றால், மனிதனே ! காது ஒடிந்து போன பயனற்ற இந்த ஊசிகூட நீ இறந்து போனால் உன் பின்னால் வராது. பிறகெதற்கு செல்வத்தைத் தேடி அலைகிறாய் என்பதுதான்.
இதை உணர்த்துவதுதான் இந்த கதை நோக்கம். வாழ்க்கையில் பணம் ஒன்றே முக்கியம் என நினைப்போருக்கு இது புரியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக