வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. !

30 டிசம்பர் 2011

மகிழ்ச்சி எங்கே?










நாளிதழ்களில் வண்ண வண்ண விளம்பரங்கள் சிறப்பு தள்ளுபடிகளை சகஜமாய் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகளும் தங்கள் பங்குக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு  நேயர்களை தங்கள் பக்கம் இழுக்க போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. ஹோட்டல்களும் சிறப்புக் கொண்டாட்டங்களுக்காக தேனூற கூவி கூவி அழைப்பு விடுக்கின்றன. இளவட்டங்களை தங்கள் வசப்படுத்த செல்பேசி நிறுவனங்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்ப சிறப்பு சலுகைகளை குறுஞ்செய்திகளாக அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
உலகமே ஆவலோடு மகிழ்ந்து கொண்டாடவிருக்கும் புத்தாண்டு விழா களைகட்ட தொடங்கி விட்டதன் அறிகுறிதான் இவை.
கடக்கும் ஆண்டின் இறுதி நொடிக்கும் புதிய ஆண்டின் ஆரம்ப நொடிக்குமான கொண்டாட்டம்தான் இவ்விழா.
இதற்காகதான் முற்பகுதியில் நான் குறிப்பிட்ட அத்தனை ஏற்பாடுகளும்.
வருடத்திற்கு ஒருமுறை இது வாடிக்கை என்ற நிலையில் அவரவரின் மனநிலைக்கேற்றபடி கொண்டாட்டங்கள் இருக்கும்.
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அந்த இறுதி நொடிப்பொழுதை ஆண்டவனின் பாதத்தில் அர்ப்பணித்து கடந்த ஆண்டில் தாங்கள் பெற்ற உயர்வை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறி புதிய ஆண்டை வரவேற்பர்.
வாழ்க்கை வாழ்வதற்கே, ஆடும் வரை ஆட்டம், உலகம் பிறந்தது எனக்காக என்றிருப்பவர்கள் டாஸ்மாக் கடைகளிலோ, ஆடம்பர ஹோட்டல்களிலோ குடித்து வெறித்து புத்தாண்டை வரவேற்பதாக நினைத்து மண்ணில் தலைக்குப்புற வீழ்ந்துக் கிடப்பர்.
(காவல்துறை பல்வேறு கட்டுபாடுகளை விதித்தும், ஆடம்பர ஹோட்டல்களுக்கு ஏகப்பட்ட விதிமுறைகளை கூறி அவற்றை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம்)
இன்னும் சிலரோ போதை தலைக்கேறிய நிலையில் டூவீலரை தாறுமாறாக ஓட்டி வழியில் காண்போருக்கு  வாழ்த்து கூறுவதாக நினைத்துக் கொண்டு என்ன சொல்கிறோம் என்பதுகூட தெரியாமல் உளறி எங்கேயாவது மோதி புத்தாண்டை மருத்துவமனைகளில் கொண்டாடுவர்.
இளசுகளோ கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தும் வகையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பேயாட்டம் ஆடி மகிழ்வர்.
இத்தனை வகையான கொண்டாட்டங்களிலும் ஒரே எதிர்பார்ப்பு மகிழ்ச்சி மட்டுமே. மகிழ்ச்சியை அடைவதற்கு மனிதன் எத்தனையோ வகைகளை கையாள்கிறான்.
எல்லா உயிரினங்களுக்கும் மகிழ்ச்சி என்பது இறைவனால் அருளப்பட்ட ஒன்றாகும். ஆறரறி கொண்ட மனிதன் மாத்திரம் அது தனக்கு மட்டுமே சொந்தம் என்பதை போல உரிமைக் கொண்டாடி அதை பல இடங்களில் தேடி அலைந்துக் கொண்டிருக்கிறான்.
 இதுபோன்ற வீணான கொண்டாட்டங்களில் கிடைக்கும் சிறிது நேர மகிழ்ச்சியை நிரந்தரம் என நினக்கிறான். உலகில் இன்றைக்கு பெரும்பாலானோர் மகிழ்ச்சியை தேடி தவறான பாதையில் ஓடி வீணாகிறார்கள்.
வீட்டில் மனைவி, பிள்ளைகளை சாப்பாட்டிற்கு தவிக்க விட்டுவிட்டு டாஸ்மாக் கடைகளிலும், ஆடம்பர ஹோட்டல்களிலும் பணத்தைக் கொடுத்து மகிழ்ச்சியையும், இன்பத்தையும் தேடி சாக்கடைகளில் வீழ்ந்துக் கிடக்கின்றனர்.
பெற்றோரின் பேச்சை கேட்க மறுத்து, அவர்களை உதாசீனப்படுத்தி விட்டு வீண் பெருமைக்காக இதுபோன்ற  கொண்டாட்டங்களில் பிள்ளைகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இது உண்மையான மகிழ்ச்சியா?
 உண்மையான மகிழ்ச்சி எங்கிருக்கிறது?
திரும்பும் பக்கமெல்லாம் மகிழ்ச்சிக் கொட்டிக் கிடக்கிறது. எத்தனையோ நேரங்களில் என்னை எடுத்துக்கொள் என்று அது கண்சிமிட்டி அழைக்கிறது. நமக்கு அது தெரிந்தாலும் நாம்தான் அதை எடுத்துக்கொள்ள மறுக்கிறோம்.
ஒர் ஆண்டைபோலவே ஒவ்வொரு நாளும் பிறக்கிறது. கண் விழிக்கும் நொடி, அதைத் தொடர்ந்து வரும் நிமிடம், மணிநேரம், பொழுது என எல்லாம் இன்பமானவையாகவே இருக்கிறது.
கவலை சிறிதுமில்லாத சிரித்து மகிழும் குழந்தையின் முகத்தில், நம் மீது வீசி செல்லும் காற்றில், அழகான மலர்களில், மனதை வருடும் இனிய இசையில் என நம்மைச் சுற்றி கொட்டிக் கிடக்கும் மகிழ்ச்சியை அந்த நாள் முழுவதும் அனுபவிக்க ஏன் முயற்சி செய்ய மறுக்கிறோம்.
நாளின் முடிவில் அதாவது படுக்கைக்கு போகும் முன்பு அந்த நாளில் நிகழ்ந்தவைகளை ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்ப்போம். மகிழ்ச்சியான தருணங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
(நீதிமொழிகள் 21:23) தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான் என்னும் வேத வாக்கினை இதயத்தில் நிறுத்தி,
அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தால், அவர்களின் மகிழ்ச்சிக்கு குந்தகம் விளைவித்திருந்தால் இறைவனிடம் மன்னிப்பு கேட்போம். மனதில் பாரமின்றி தூங்க செல்வோம்.
ஒவ்வொரு நாளின் முடிவில் இப்படி சுய பரிசோதனை செய்வோம். தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து விடுவோம்.
நாசியில் சுவாசத்தோடு மீண்டும் ஒரு புதிய நாளுக்குள் நுழைவோம். இப்படி செய்வதால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ள் முடியும்.

புத்தாண்டை மகிழ்ச்சிக்காக கொண்டாடுவோரே, இந்த நொடியில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி, இன்பத்தை அந்த ஆண்டு முழுவதும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?

நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் வெறும் சடங்கிற்காக வாழ்த்துவதை தவிர்த்து காணும் போதெல்லாம் அவர்களை மனதார வாழ்த்துவோம்
புதிய ஆண்டை வரவேற்று கொண்டாடவிருக்கும் நாம் இவைகளை மனதில் நிறுத்துவோம்.

மகிழ்ச்சியை பற்றி நினைப்போம்மகிழ்ச்சியாக இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுவோம்மகிழ்ச்சியை நம்புவோம்மகிழ்ச்சியை நிலை நிறுத்துவோம்அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்போம். 

 "செய்வதற்குச் சில, நேசிப்பதற்குச் சில, மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில, இவைகளே மகிழ்ச்சியின் உன்னத அத்தியாவசியத் தேவைகள்."  - Allan K. Chalmers 

"செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை."  - Benjamin Disraeli 

உன்னுடைய உழைப்பும் சொற்களும் உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில் மகிழ்ச்சி வருகிறது.  – Buddha


22 டிசம்பர் 2011

வேண்டாம் வீண் பெருமை...






பிறந்த நாள்.. ஆம், அந்த நாளை நினைத்தாலே அநேகருக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி தாண்டவமாடும்.
சாதாரண மக்கள் தொடங்கி நாடாளும் அமைச்சர்கள் வரையில் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆன்றோர் முதல் அரசியல்வாதிகளும், அன்றாடம் காய்ச்சிகளும் கோடீஸ்வரன்களும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.
என்ன, கொண்டாட்டங்களில்தான் வித்தியாசம் இருக்கும்.
தாயின் கருவறையில் இருந்து உலகை எட்டிப் பார்க்கும் நாள் பிறந்தநாளாக பதிவு செய்யப்படுகிறது. மனிதனின் வாழ்க்கை தொடக்கத்தின் குறியீடு அந்த நாள். அந்த நாள் இல்லாவிட்டால் மனித வாழ்க்கை இல்லை என்றே சொல்லலாம். எல்லா உயிரினங்களுக்கும் அந்த நாள் உண்டு.
நம்மால் அந்த நாளை நிர்ணயித்துக் கொள்ள முடியாது. இந்த உலகிற்குள் நாம் நுழைய கருவிகளாக இருந்த அப்பன், ஆத்தாளும் அதை நிர்ணயித்திருக்க முடியாது. பின் அந்த நாளை நிர்ணயித்தது யார்?
அம்மா, அப்பா என்ற இரண்டு பொம்மைகளை உருவாக்கி, அவற்றுக்கு துடிப்பையும் கொடுத்து, இருவரின் துடிப்பும் அடங்கிய பின் அங்கே மற்றொரு உயிர்துடிப்பை உண்டாக்கிய ஆண்டவன்தான் அந்த நாளையும் நிர்ணயிப்பவன்.
இந¢த அம்மா, அப்பாவுக்குதான் மகனாக, மகளாக பிறக்க வேண்டும் என்று நாம் கேட்டதில்லை. இவன்தான் எனக்கு மகனாக, இவள்தான் எனக்கு மகளாக வரவேண்டும் என்றும் எந்த தாய், தந்தையும் கேட்டதில்லை.
யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது ஆண்டவன் மட்டுமே  அறிந்த ரகசியம்.
தாயின் கருவறைக்குள் ஒரு புள்ளியாய் நுழைந்ததும், அறையின் கதவை பூட்டி விடுபவன் அவன். பத்துமாதங்கள் தண்ணீர் குளத்திற்குள் (பனிக்குடத்திற்குள்) தள்ளி நம்மை சிறை வைத்ததும் அவன் செயலே. நிர்ணயிக்கப்பட்ட சிறை தண்டனை காலத்தில் இருட்டு அறைக்குள்  எந்த முத்தை எடுப்பதற்காக நாம் மூழ்கி கிடந்தோமோ அவனுக்கே வெளிச்சம்.
நீரில் மூழ்க விட்டு தண்டனை கொடுத்தாலும் தாய்க்கும், நமக்கும் இணைக்கப்பட்ட உறவுக் குழாயின் (தொப்புள்கொடி) வழியே  அந்த கருணை வள்ளல் நமக்கு உணவையும் அளித்து உருவாக்கினான். கரு உருவாகி கை, கால்கள் முளைக்கத் தொடங்கி அத்தனை அவயங்களையும் அந்தந்த இடத்தில் சரியாக வைத்து அழகு பார்த்தவன் அவன். நாசியில் சுவாசத்தையும் வைத்தான் நாம் உயிர் வாழ. கருவறை சிறை தண்டனை முடிந்ததும் ஒரு நாளையும் குறித்து இந்த உலகிற்குள் நம்மை அனுப்பியும் வைத்தான்.
இத்தனை கரிசனமும் அவனுக்கு எதற்கு என்று எப்போதாவது நாம் நினைத்து பார்த்திருக்கிறோமா?
இந்த உலகில் கொண்டு வந்ததன் மூலம் அவனுக்கு நம்மை குறித்த ஏதோ ஒரு நோக்கம் இருந்திருக்க வேண்டும். அதையாவது சிந்திக்கிறோமா?
நமது பிறப்புக்கு நாம் என்ன சாதனை செய்தோம்?
பிறந்தநாளை கொண்டாட வேன்டும் என்று கண்டுபிடித்தவன் எவன்? பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தை பார்க்கும்போது ஏதோ இவர்கள் மட்டுமே அதிசயமாக இந்த உலகத்தில் பிறந்தவர்களைப் போல காட்டிக் கொள்கிறார்கள்.
போஸ்டர்களில் விதம் விதமாக அவர்கள் கொடுக்கும் போஸ்களை பார்த்தாலே இவர்களின் வீண் பெருமையை தெரிந்து கொள்ளலாம். சில நேரங்களில் உண்டியல் வைத்து பணம் வசூலிக்கும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு. பிறந்தநாள் பரிசு வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்ற படிகளில் ஏறியவர்களும் உண்டு.
அவர்களைப் பொறுத்தவரை பிறந்தநாள் கொண்டாட்டம் வரவை கொடுக்கிறது. ஆனால், நடுத்தர ஏழை மக்களுக்கோ செலவும், துன்பமும் துயரமும்தான் மிஞ்சுகிறது.
பணவசதி உள்ளவர்கள் கொண்டாடுவதை பார்த்து வசதியில்லாத ஏழை நடுத்தர மக்களும் பிறந்தநாளை கொண்டாட விரும்புகின்றனர். இதனால் தேவையில்லாமல் கடன்படுகின்றனர். கடன் சுமை ஏறி கவலையில் வீழ்ந்து விடுகின்றனர். வெளிபகட்டுக்காக இவ்வாறு செய்து கஷ்டபடுகிறார்கள்.
வருடத்தில்  ஒருநாள் சந்தோஷமாக இருக்கக் கூடாதா என்றும் சமாதானம் கூறுகின்றனர். அந்த நாளில் மட்டும் பலவித வாழ்த்துக்களைக் கூறி வாழ்த்துகின்றனர். மற்ற நாட்களில் முகத்திற்கு நேராகவோ அல்லது மறைமுகமாகவோ திட்டி தீர்க்கின்றனர்.
ஒரு சிலர் பிறந்தநாளின்போது அனாதை ஆசிரமங்களுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு, பரிசுப் பொருட்களைக் கொடுத்து மகிழ்கின்றனர். வரவேற்க வேண்டிய செயல்தான் இது என்றாலும்  செய்த உதவியை புகைப்படங்களாகவும், வீடியோ காட்சிகளாகவும் பதிவு செய்து எடுத்து வந்து மற்றவர்களுக்குக் காட்டி வீண் பெருமையை தேடி கொள்கின்றனர்.
தாயின் வயிற்றிலிருந்து ஒருமுறைதான் ஒருவன் பிறக்கிறான். வருடா வருடம் தாயின் வயிற்றிலிருந்து பிறக்க முடியாதவனை பிறந்தவனாக சொல்வது எந்த வகையில் நியாயம்?
குறிப்பிட்ட பிறந்தநாள் ஒவ்வொரு மாதத்திலும், கிழமை ஒவ்வொரு வாரத்திலும், நேரம் ஒவ்வொரு நாளிலும் வருகிறதே அப்படியானால் இந்த நேரங்களிலும் எல்லாம் கொண்டாட வேண்டியதுதானே?
நல்லவர்களை வாழ்த்துவதில் தப்பில்லை. அதே நேரத்தில் மிகவும் மோசமான குணாதிசயம் கொண்டு வாழும் தீயவன் ஒருவனை அவன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நீடூழி வாழ்க என்று வாழ்துவது, அவனின் தீயச் செயல்களை ஊக்குவிப்பதோடு, இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து அடுத்தவர்களின் வாழ்வை கெடு என்று வாழ்த்துவது போல ஆகி விடாதா?
நாட்டில் இன்று அதுதானே நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு, சமுதாயத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்த எத்தனையோ உத்தமர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது விதிவிலக்கு.
இயேசு, புத்தர், காந்தி, அம்பேத்கர், அன்னை தெரசா, பெரியார், காமராஜர் போன்றவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அர்த்தம் உண்டு. முன்பகுதியில் நான் குறிப்பிட்டதைப் போல இவர்கள் இறைவனின் குறிக்கோளை உணர்ந்து சமுதாயத்தில் தங்கள் பணிகளை திறம்பட செய்து விட்டு மறைந்திருக்கிறார்கள். வீண் பெருமைக்காக இவர்களெல்லாம் தங்களின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்க மாட்டார்கள்.
வெள்ளையர் நம்மை அடிமைப்படுத்தியிருந்த காலத்தில்தான்  இதுபோன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டது என்று கூறுகின்றனர். ஒருவேளை இது உண்மையாக கூட இருக்கலாம்.
இன்றைக்கு நாம் கொண்டாடும் பலவித கொண்டாட்டங்கள் காப்பியடிக்கப்பட்ட வேண்டாத பழக்கங்களே. வெள்ளையரிடம் இருந்து நாம் நிறைய நல்ல பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். அவர்களும் எத்தனையோ நல்ல பழக்கங்களை விட்டு சென்றிருக்கின்றனர். அதையெல்லாம் பின் தள்ளிவிட்டு நமது கலாச்சாரத்திற்கு ஒத்துவராத இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் போல திருமணநாள், அன்னையர் தினம், தந்தையர் தினம், இளையோர் தினம், காதலர் தினம் என பல்வேறு தினங்களை கொண்டாட்டங்களாக கொண்டாடி வருகிறோம¢.
இதில் எனக்கென்ன வருத்தம் என்றால் வருடத்தில் ஒரு நாள் அன்னையர் தினத்தில் மட்டும் தாயை வணங்கி, மதித்து வாழ்த்தி விட்டு அடுத்த நாளே அவரை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விட்டு விடுகிறார்களே என்பதுதான்.
திருமண நாளில் மட்டும் கணவனையோ, மனைவியையோ மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் வருடத்தில் எல்லா நாட்களிலும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லையே?
குழந்தைகள் தினம் அன்று மட்டும் குழந்தைகளை பெரிதாக தூக்கிக் கொஞ்சி விட்டு, அதன்பிறகு அவர்களை குழந்தை தொழிலாளர்களாக அடிமைகளைப் போல நடத்துகின்றனரே...
காதலர் தினத்தில் மட்டும் கொஞ்சி மகிழும் காதலனும், காதலியும் அடுத்த காதலர் தினத்திற்குள் வேறொரு காதலர்களோடு உலா வருகிறார்களே?
இதுபோல எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.
பிறந்த தேதிக்கு மட்டும் வாழ்த்து சொல்வதும், புத்தாண்டு உள்ளிட்ட விஷேச நாட்களில் மட்டும் நலமாக இருக்கச் சொல்வதும் சரியா?
அந்தநாட்களில் மட்டும் சடங்காக வாழ்த்துவதை விட்டு ஆண்டு முழுவதும் நலமாக வாழ யாரும் வாழ்த்துவதில்லையே ஏன்?
குடும்பம் முழுவதும் அந்த நாளில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால், ஏன் வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது?
சந்திக்கும்போதெல்லாம் நல்ல மனதுடன் நல்வாழ்த்துக்களை ஏன் பகிர்ந்து கொள்ளக்கூடாது?
ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று காலத்தை கடத்துவதை விட நம்மை குறித்த இறைவனின் நோக்கத்தை அறிந்துக் கொண்டு அதைச் செயல்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். அப்போதுதான் நமது பிறப்பிற்கும் அர்த்தமிருக்கும்.
பிறப்பதற்கு நாளை குறித்த இறைவனே நமக்கு இறப்பின் நாளையும் குறித்து வைத்துள்ளான்.
ஒரு முறை பிறந்து விட்டால், மறுபடியும் பிறக்க முடியாது இறக்கத்தான் முடியும். அதுவும் ஒருமுறைதான் என்பதை இறைவன் பல்வேறு சம்பவங்கள் மூலமாக உணர்த்தினாலும் நாம் உணர்வதில்லையே. இவ்வுலகம் நிரந்தரம் என்பது போல செயல்படுவதை தவிர்த்து நமக்கு குறிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள்  அடுத்தவருக்கு உதவியாக இருப்போம். எப்போதும் நல்வாழ்த்துக்களை சம்பாதிப்போம். அவைதான் நம்மையும், நமது சந்ததியையும் காப்பாற்றும்
அன்றைய தினத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதோடு, கருவிகளாக செயல்பட்டு நமது நல்வாழ்வை விரும்பும் தாய், தந்தையருக்கும் நன்றி செலுத்தவேண்டும். வீண் பெருமைக்காக ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தால் நற்காரியங்களுக்காக அந்த நாளை செலவிடலாம்.
பிறந்தநாள் கொண்டுவதன் மூலம் தாய், தந்தை, உடன்பிறப்புகள், உற்றார்  உறவினர்களிடம வேண்டுமானால் நன்மதிப்பையும், வாழ்த்துகளையும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நமக்கு உயிர் கொடுத்த இறைவனிடம் நன்மதிப்பை பெற முடியாது. நமது நற்பண்புகளால் சிறப்பாக்குவதன் மூலமே அவனின் உவப்பை பெறமுடியும் என்பதே என் கருத்து.
இன்றைய (டிசம்பர்- 19) எனது பிறந்தநாளின்போது எனக்குள் உதித்தவைகளைப் பதிவு செயதிருக்கிறேன்.

யார் பிக் பாஸ்?





உடல், ஆன்மா, மனம் ஆகியவைகளின் மொத்த கலவைதான் உயிருள்ள மனிதன். இவற்றில் ஏதாவது ஒன்று தனக்கு தேவையில்லை என்று எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. அப்படி சொல்வானானால் அவன் மனிதனாக இருக்க முடியாது. பிறக்கும்போதே இவை நம்முடன் வருபவை. இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது என்று நினைக்கிறேன்.
 
சரி அதற்கென்ன இப்போ என்கிறீர்களா?
 
இந்த மூன்றில் யார் பிக் பாஸ் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியதால் சிந்தனை குதிரையைத் தட்டி விட்டேன்.
 
இதைப் பற்றி எழுதுவதற்கு முன் இவை குறித்த எனது தேடல் நீண்டது. வளைத்தளம், வளைப்பூக்கள் என தேடி பார்த்தேன். இருப்பினும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. எனக்குள் தேட முயன்றபோது கிடைத்ததை பதிவு செய்கிறேன்.
 
ஒன்றை விட்டு இன்னொன்று இயங்க முடியாது என்பது இந்த மூன்றுக்கும் தெரியும். அப்படியிருக்கையில் தேவையா இப்படியொரு விபரீத போட்டி. என்கிறீர்களா?
 
போட்டி என்று வந்து விட்ட பிறகு இனிமேல் என்ன செய்வது?
 
ஆன்மா, மனம் ஆகியவற்றால் இயக்கப்படுவதால் மனித உடல் சற்று பலவீனமானவனாக எனக்கு தெரிகிறது.
 
மற்ற இரண்டும் சற்று பலம் பொருந்தியதாகவும், ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் இருக்கின்றன.
 
இரண்டும் மனிதனுக்குள் இருந்து செயல்பட்டு கொண்டிருப்பவை. இவற்றில் முழு முதற்காரணமாக விளங்குவது மனம். இதைப் பற்றிக் கூற வேண்டுமானால்,  மிகவும் வேகமாக செயல்படக் கூடியது. குப்பைகளை கொட்டுவதைப் போல நொடிக்கொரு தரம் எண்ணங்களை பிரசவித்து கொண்டிருக்கும்.
 
அந்த எண்ணக் குப்பைகளில் சில நேரம் மாணிக்கங்கள் கிடைப்பதுண்டு. அவ்வாறு கிடைக்கும் மாணிக்கங்களால் மனிதன் சுடர்விட்டு ஒளிர்வதும் உண்டு.
 
மனிதனின் ஒவ்வொரு செயலும் இதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
இதன் எல்லா எண்ணங்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை.சீரழிக்கவும், சீர்படுத்தவும் செய்யும் எண்ணங்களை உருவாக்கும் அதிசய கருவி இது.
 
மகிழ்ச்சியான தருணங்களில் துள்ளி குதிக்கும்.  காதல், காமம், பாலியல் உறவுகள் போன்ற விஷயங்களின்போது குத்தாட்டமும் போடும்.  ஏதேனும் நடக்கக்கூடாதது நடந்து விட்டாலோ நோயில் விழுந்து பாயில் படுத்தவனைப் போல கிடக்கும்.
 
இதனால் உருவாகும் உணர்ச்சிகளுக்கு வடிக்காலாக இருப்பவன்தான் மனிதன். இன்னும் சொல்லப் போனால் இது கண்ணுக்குத் தெரியாத மாயாவி.
 
மனிதனின்  செயலுக்கு இது பிண்ணனி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதை யாரும் குறை கூறுவதில்லை.
 
வில்லில் இருந்து புறப்பட்டு வந்து அம்பு தாக்கும்போது, தாக்குண்டவர் அம்பின் மீதுதான் கோபம் கொள்கிறாரே தவிர, அது புறப்பட்டு வந்த வில்லின் மீது கோபப்படுவதில்லை. அதுபோலதான் இது தப்பித்துக் கொள்ளும்.
 
மனிதனை ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்ற இதை ஒரு பிக்பாஸ் என்றே கருதலாம்.
 
இதேவேளையில் இதை எதிர்த்துப் போட்டியிடும் ஆன்மாவின் பலமும் என்ன என்பதை தெரிந்து கொண்டால் இறுதி முடிவு எடுத்து விடலாம்.
 
ஆகாய விமானத்தில் ரகசிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்குமாம். அதனை பிளாக் பாக்ஸ் என்று கூறுவார்களாம். வானத்தில் செல்லும் ஆகாய விமானம் ஏதேனும் விபத்துக்குள்ளாக நேரிட்டால், விபத்து நடந்த இடத்தில் முதலில் தேடப்படுவது இந்த கருப்புப் பெட்டியைத்தானாம். ஏனென்றால், விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்ற தகவல் அதில் துல்லியமாக பதிவாகி இருக்குமாம். அதை வைத்து காரணத்தைக் கண்டுபிடித்து விடுவார்களாம்.
 
ஒருவகையில் இதுவும் அந்த பிளாக் பாக்ஸை போலத்தான் செயல்படுகிறது.
 
மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் எப்படி மனம் காரணமாகிறதோ, அந்த செயலின் மூலம் ஏற்படும் சாதக, பாதக நிகழ்வுகளை பதிவு செய்து நேரம் கிடைக்கும்போது, அதை மனிதனுக்கு ரீவைண்ட் செய்து காண்பிப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது.
 
மனிதன் பிறக்கும்போதே மனதைபோல் இதுவும் அவனுக்குள் இயங்க தொடங்கி விடுகிறது.
 
மனதில் தோன்றும் எண்ணம் நல்லனவாக இருந்தால் முதலில் பாராட்டி அதை நிறைவேற்றுவதற்கு உதவுவது இதுதான்.
 
அதே வேளையில் தீய எண்ணம் உருவாகுமானால் முதலில் எச்சரிக்கை மணி அடித்து, அதனால் உண்டாகும் ஆபத்தை உணர்த்துவதும் இதுதான்.
 
இது நல்ல எண்ணங்கள் உருவாகும்போது மகிழ்ந்து மனதுடன் கை குலுக்கிக் கொள்ளும். இதன் பாராட்டு மழையில் நனையும் மனமும் உடனே மனிதன்மூலம் அதனை வெளிப்படுத்தி அவனுக்கு நற்பெயரை பெற்றுத் தருகிறது.
 
தவறான எண்ணமாக இருந்தால் மனதுடன் கடுமையான விவாதம் செய்யும். சிலநேரங்களில் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போராட்டமே நடக்கும். இவர்களின் போராட்டத்தால் மனிதனும் மிகுந்த சஞ்சலத்திற்கு ஆளாகிறான். அந்நேரத்தில் இதன் பேச்சை மனம் கேட்க மறுப்பதோடு அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதில் தீவிர முயற்சி எடுத்து  மனிதனை அதில் சிக்க வைத்து விடுகிறது. இதுவோ வாயடைத்து அமைதியாகி விடுகிறது.
 
கடவுளுக்கும் இதற்கும் நேரடி தொடர்பு உள்ளது என்ற நம்பிக்கை ஆன்மிக சிந்தனை உள்ளவர்களுக்கு இருக்கிறது. அதேபோல் பாவம், சொர்க்கம், நரகம் என்ற சிந்தனை உள்ளவர்கள் பெரும்பாலும் இதனை துணையாக அழைத்துக் கொண்டு இறைவனை நாடுவர்.
 
இது எனக்குள் இருக்கிறது என்ற உணர்வு இல்லாத நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
 
வேகத்தின் செயல்பாடு மனம், இதன் செயல்பாடோ அமைதிப் புரட்சி.
 
எண்ணங்களை பிரசவிப்பது, அதை நிறைவேற்றுவது என செயல்படும் மனம், அடுத்ததொரு புதிய எண்ணம் உருவானவுடன் பழைய எண்ணத்தையோ, அதனால் அடைந்த லாப, நஷ்டத்தையோ கணக்கில் எடுத்துக் கொள்ளாது.  
 
ஆனால், இதுவோ மனதின் ஒவ்வொரு எண்ணத்தையும், அதனால் நிகழும் விளைவுகளையும் தனக்குள் பதிய வைத்துக் கொள்ளும்.
 
மனிதன் துன்பத்திற்குள்ளாகும்போது மனம் கை கழுவி விடும்.  இதுவோ, மனிதனின் இந்த நிலைக்கு நீதான் காரணம். நான் அப்போதே கூறினேன் கேட்கவில்லை என்று கூறி தான் பிடித்து வைத்திருக்கும் படத்தை ரீவைண்ட் செய்து காண்பித்து தவறு எங்கே நிகழ்ந்திருக்கிறது என்று உணர்த்தும்.
 
பூமியை விட்டு பிரியும்போது மனமும், அது இயக்கிய மனித உடலும் அழிந்து விடுகின்றன. ஆனால் இதற்கு அழிவு என்பதே இல்லை. இது இன்னொரு உயிருக்குள் வைக்கப்பட்டு மீண்டும் பிறக்கும் என்கின்றனர் அடுத்த பிறவியை நம்புபவர்கள்.
 
எல்லா மதங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
 
மரணத்திற்கு பின் இன்னொரு உலகம் உண்டு. மனிதனின் ஆன்மா கடவுளின் நியாயத்தீர்ப்புக்காக கடவுளின் முன்பு நிறுத்தப்படும். அப்போது அந்த ஆன்மாவின் பதிவுப்படி தீர்ப்பு கிடைக்கும். அதன்பிறகு சொர்க்கமோ, நரகமோ கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நம்மில் பலரிடம் உள்ளது.
 
ஆக, இத்தகைய செயல்பாடுகளின் மூலம் மனதை விட இது அதிக பலம் பொருந்தியதாகவே காணப்படுகிறது.  
 
மனிதன், மனம், ஆன்மா ஆகிய இந்த மூன்றுக்கும் இடையே உருவான போட்டியில் இப்பிறவியை கடந்தும் உயிரோடு இருக்கும் ஆன்மாதான் பிக் பாஸ் என்ற முடிவை நான் எடுத்து விட்டேன்.
 
வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களைக் கடந்து லாப, நஷ்டங்களை நான் கணக்கிட்டபோது எனக்குள் இருந்த ஆன்மாவை கண்டுகொண்டேன்.
 
என் வாழ்க்கையின் காலகட்டத்தில், நான் நடந்து வந்தபாதையில் பதிவு செய்து வைத்திருந்த எனது செயல்பாடுகளும், அவற்றின் மூலம் நான் எத்தகையவன் என்பதை உணர்த்தியதே என் ஆன்மாதான்.
 
இதன் மூலம் என் மனம் பிரசவிக்கும் எண்ணங்கள் நல்லவையா? தீயவையா என்பதை இப்போது என்னால் உணர்ந்துக் கொள்ள முடியும்.
 
நான் எப்படி செயல்பட வேண்டும் என்ற ஆலோசனையை ஆன்மாவிடம் இருந்து என் மனம் பெற்றுத் தருகிறது. அதன்படி என் ஓட்டத்தை ஓடிக் கொண்டிருக்கிறேன்.
 
கண் மூடி திறப்பதற்குள் காலம் மிக வேகமாக கடந்து கொண்டிருக்கிறது. இனி இந்த உலகில் வாழும் நாட்களில் எனக்கான ட்ராக்கில் ஒழுங்காக ஓடி என்  ஓட்டத்தை முடிக்கவே முயற்சிக்கிறேன்.
 
என் முடிவை தெரிவித்து விட்டேன்.
 
இனி இந்த போட்டியில் வெற்றி பெற்றவர் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.