வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. !

22 டிசம்பர் 2011

இதுதான் நட்பு





பல்லும், நாக்கும் நீண்ட காலமாக நல்ல நட்புடன் பழகி வந்தன. திடீரென்று அவைகளுக்குள் மனக்கசப்பு உண்டானது. இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
 
நட்பை மனதில் நினைத்து நாக்கு அமைதி காத்தது. ஆனால், பல்லோ எப்போதும் தன்னை வலிமையானவனாக காட்டிக் கொண்டது. நட்புடன் பழகிய காலத்தில் நாக்கின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடந்து வந்த பல், இப்போது அதனை உதாசீனப்படுத்தியது.
 
அதுமட்டுமல்லாமல், நாக்கின் ஒவ்வொரு செய்கையையும் அது குறை கூறி வந்தது. ஒரு கணத்தில் நாக்கை கடித்து துன்புறுத்தும் வேலையையும் பல் மேற்கொண்டது.
 
தொடர் தாக்குதலால் நாக்கு புண்ணாகியது. ஒருபுறம் வசவு வார்த்தைகள், மற்றொரு புறம் தாக்குதலால் ஏற்பட்ட காயம். நாக்கு அமைதியுடன் தன் வேலைகளை மட்டும் செய்தது. அத்துடன் பல்லின் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பும் கொடுத்து வந்தது.
 
இத்தனை களேபரமும் இரண்டையும் பெற்றிருந்த மனிதனுக்கு தெரியா மலேயே இருந்தது.
 
தனது வலிமை என்ன என்பது நாக்குக்கு தெரியும். இருப்பினும் தன்னால் பல்லுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இருந்தது.
 
இதை அறியாத பல், தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தது.
 
ஓடுகிற நாயைக் கண்டால், துரத்துகிற நாய்க்கு இளக்காரம் என்று சொல் வார்கள். ஆனால், ஓடுகிற நாய் நின்று திரும்பினால், துரத்தும் நாயின் கதி அவ்வளவுதான்.
 
இதுதான் நடந்தது இருவரிடையே.
 
பொறுத்து பொறுத்து பார்த்து வந்த நாக்கு, இதற்கு மேல் பொறுக்க முடியாது என்ற நிலை வந்தபோது பல்லை எதிர்க்கும் முடிவுக்கு வந்தது. ஆனால், அதற்கான சமயம் வரும் வரை காத்திருந்தது. நேரம் பார்த்து எதிரியை வீழ்த்துவது தானே விவேகமுள்ள வீரனுக்கு அடையாளம்.
 
பல்லுக்கும், நாக்குக்கும் எஜமானான அந்த மனிதன தன்நிலை மறந்து குடிபோதையில் இருந்தான். இதுதான் தனக்கு சரியான நேரமாக நாக்கு எண்ணியது.
 
போதையில் இருந்த அந்த மனிதனை நாக்கு இயக்கியது. வீதியில் சென்ற மனிதர்களை பார்த்து தகாத வார்த்தைகளால் அவன் திட்டத் தொடங்கினான். சிலர் ஒதுங்கி போயினர். பலரோ குடிகாரனின் பேச்சை பொருட் படுத்தவில்லை. நாக்குக்கு சற்று வருத்தம்தான். எதிர்பார்த்தது நடக்கவில்லையே.
 
சிறிது நேரத்தில் மற்றொரு குடிகாரன் எதிர்பட்டான். அவனை பார்த்து முந்தைய மனிதன் தாறுமாறாக திட்டினான். மற்றவனுக்கு கோபம் வந்தது. ஓங்கி அடித்ததில் முந்தையவனின் பற்கள் நான்கு சிதறி விழுந்தன. அப்பாடா நிம்மதி பிறந்தது நாக்குக்கு.
 
பற்களை இழந்த மனிதன் ரத்தம் வழிவது தெரியாமல் மயங்கி விழுந்தான்.
 
ஏன் இப்படி செய்தாய்? பல் கேட்டது.
 
இதுவரை உனது பாதுகாப்பில்தான் நான் இருந்தேன் என்பதையும் மறந்து எனக்கு தொல்லை கொடுத்தாயே. நட்பு பெரிதென்று எத்தனை நாள் உன் தொல்லைகளை பொறுத்திருந்தேன். அந்த எண்ணம் ஏன் உனக்கு வரவில்லை. உன்னை போலவே என்னை எண்ணி விட்டாய். உன் எண்ணம் வேறு, என் எண்ணம் வேறு. என் செயல்பாடு வேறு, உன் செயல்பாடு வேறு. இருப்பினும் நம்மை உருவாக்கின இறைவனின் நோக்கத்தை அறிந்து உனக்கு உறுதுணையாகவே இருந்தேன். உனக்கு பாடம் கற்பிக்க நினைத்தேன். ஆனால் இந்த அளவுக்கு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. என்றது நாக்கு.
 
அவரவர் வேலையை ஒழுங்காக செய்தாலே அனைத்தும் நலமாக இருக்கும். இனி நான் என் வேலையை தொடரலாம் அல்லவா என்றும் நாக்கு கேட்டது.
 
ஆஹா நம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தமடைந்த பல் தன்னை திருத்திக் கொண்டது. நாக்குக்கு தொல்லை தருவதை நிறுத்திக் கொண்டது.
 
மீண்டும் அங்கே நட்பு தலை தூக்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக