வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. !

25 ஏப்ரல் 2012

காசிமேட்டு வாசி


காசிமேட்டு மீனவ உழைப்பாளிகள்
னித வாழ்க்கையின் இன்றைய ஓட்டத்தில் தேடல் என்பது நீண்டு கொண்டே இருக்கிறது. அன்பு தேடல், அறிவுத்தேடல், பொருள் தேடல், ஆன்மிகத் தேடல் என தேடலில் பலவகை உண்டு. அறிவுத் தேடல் என்பது பலவகை நூல்களை தேடிப் பிடித்து படித்து இன்பம் அனுபவிப்பது. நூல்களை தேடுவதற்கு வாசிக்கும் பழக்கம் அவசியமாகிறது. புத்தகம் வாசிப்பு என்பது பழக்கத்தில் உருவாவது.
பத்து வயதிருக்கும்போது எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அறிவுக்குத் தேவையானவற்றை படிக்க வேண்டும் என்று அந்த வயதில் நான் எண்ணியதில்லை.
எல்லா பிள்ளைகளைப் போலவே பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது கொஞ்சம் நேரம் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. என்ன விளையாடுவது என்பதில்தான் குழப்பம்.
நான் வசித்த காசிமேடு (ராயபுரம்) பகுதியில் கோலி விளையாட்டு, சீட்டு விளையாட்டு, பம்பரம் விடுதல், கில்லி விளையாட்டு, நொண்டி விளையாட்டு என சிறுவர்கள் விளையாடுவார்கள். கொஞ்சம் வசதிப் படைத்தவர்களின் வீடுகளில் கேரம், செஸ் விளையாட்டு முக்கிய இடம் பிடித்திருந்தது. கோலி விளையாட்டு, சீட்டு விளையாட்டு சூதாட்டமாக கருதப்பட்டதால் இவற்றை விளையாட அப்பா அனுமதித்ததில்லை. நொண்டி ஆட்டத்தில் பெரும்பாலும் பெண் பிள்ளைகள் விளையாடுவார்கள். அவர்கள் எங்களை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். மற்ற விளையாட்டில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள நான் விரும்பியதில்லை.
பம்பரம் விடுதல் மட்டுமே எனக்குத் தெரிந்த ஒரே  விளையாட்டாகிப் போனது. அதுகூட அப்பா வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வருவதற்குள் விளையாடி முடித்திருக்க வேண்டும். ஒருவேளை தெருவில் பம்பரம் விடுவதை அப்பா பார்த்து விட்டாலோ அவ்வளவுதான். (பம்பரம் உபயம் என் ஆசை பாட்டிதான். முந்தானையில் மறைத்து வைத்து விளையாட கொடுப்பார்.) எத்தனை நாளைக்குதான் பம்பரம் விடுவது? வேறு ஏதாவது விளையாட வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் வசதியில்லை.
எங்களுக்கு முன்பிருந்த தலைமுறையினருக்கு படிப்பறிவு குறைவுதான். எங்கள் பகுதி பெற்றோர் அனைவரின் ஒட்டுமொத்த ஆசை, தங்கள் பிள்ளைகளாவது படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்பதுதான்.
அந்த வகையில் என்னை சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். 8-ஆம் வகுப்பு வரை படித்தேன். சென்னை பிராட்வேயில் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயின்ட் கேபிரியேல் மேல்நிலைப்பள்ளியில் உயர்நிலைக்கல்வி (எஸ்.எஸ்.எல்.சி.,- 11-ஆம் வகுப்பு)  படித்தேன்.
எங்கள் பகுதி மீனவர்கள் அதிகம் வாழும் பகுதியானதால் பெரும்பாலான குடும்பத்தலைவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டனர். கடின உழைப்பாளிகள்.
சிலர் சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்தார்கள். கப்பலில் மூட்டைகளை ஏற்றி இறக்கும் தொழில் செய்தனர். வேலை முடிந்து வீட்டிற்கும் திரும்பும் அவர்கள் கடின உழைப்பினால் ஏற்பட்ட தங்களின் உடல் வலியை போக்கிக் கொள்கிறோம் என்று கூறிக் கொண்டு குடிப்பழக்கத்திற்கு ஆளாயினர். எங்கள் குடும்பம் வாழ்ந்த தெருவில் சாராயம் தாராளமாக கிடைத்தது. இதன் காரணமாக பலர் வேலைக்கு செல்லாமல் எப்போதும் மது மயக்கத்திலேயே இருந்தனர்.
நாளடைவில் பண்டிகை காலங்களில் அருந்துவதற்காகவே போதைப் பொருட்களை வீட்டிலேயே தயாரிக்கத் தொடங்கினர். (குறிப்பாக ரைஸ் பீர்- அதாவது சுண்டிச்சோறு என்றும், டப்பா என்றும் அழைக்கப்படும் போதைப் பொருள். கொஞ்சம் வசதிப்படைத்தவர்கள் திராட்சைப் பழங்களைக் கொண்டு ஒயின் தயாரித்தனர். ).
இதனால் தேவையில்லாமல் சண்டைகள் உருவாயின. சிறு சண்டைகளுக்குக் கூட ஒருவரையொருவர் பெரிய பெரிய பட்டாக் கத்திகளால் வெட்டிக் கொண்டனர். உடல் வலிமைப்படைத்த சிலர் ரவுடிகளாக செயல்பட்டனர். போதை பொருட்கள் அதிகம் கிடைக்கும் இடமாக காசிமேடு அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மாறி போயின. இதன் காரணமாகத்தான் அண்மைக்கால திரைப்பட பாடல்களில் கூட காசிமேடு முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு காசிமேடு பகுதி என்றாலே அலர்ஜி. வர மாட்டார்கள், வந்தாலும் தலை தெறிக்க ஓடுவார்கள்.
போலீசாருக்கு இது தலைவலியாக இருந்தாலும், லஞ்சம் அதிகம் வந்ததால் கண்டும் காணாமலும் இருந்து விட்டனர். பேருக்கு சிலரைப் பிடித்து கேஸ் போடுவார்கள்.  நாளாக நாளாக கொலைகள் நடக்கும் பகுதியாக காசிமேட்டை உள்ளடக்கிய வடசென்னை பகுதி மாறிபோனது.
இது ஒருபக்கம் வருத்தத்தைத் தந்தது.
மற்றொரு பக்கமோ சாதி, மத பேதமில்லாமல் ஒவ்வொரு குடும்பத்தினரும் தன் பக்கத்து வீட்டாரோடு நேசத்துடன் உறவு முறைகளை ஏற்படுத்தி வாழ்ந்தனர். எங்கள் வீட்டின் பக்கத்தில் குடியிருந்த குடும்பத்தலைவரை என் அம்மா அண்ணன் என்று அழைப்பார். குடும்பத்தலைவியை அண்ணி என்று அழைப்பார். அவர்கள் வீட்டிலும் அதேபோல்தான். இதனால் சிறுவர்களாகிய நாங்கள் அத்தை, மாமா என்ற முறைவைத்து உறவாடுவோம்.

குடியின் சீரழிவில் இருந்து அடுத்த தலைமுறையினரை அதாவது  சிறுவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்  எங்கள் காசிமேடு பகுதியில் சிட்டி போலீஸ் பாய்ஸ் கிளப் என்ற ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. மாலை 4 மணியிலிருந்து இரவு 7 மணிவரை திறந்திருக்கும் இந்த சங்கத்தில் கேரம், செஸ் போன்றவை விளையாடும் வசதியிருந்தது. கொஞ்சம் பெரிய பிள்ளைகள் மைதானத்திற்கு சென்று விளையாட கால்பந்து விளையாட்டு வசதியும் இருந்தது.
மாலை 4.30 மணிக்கு பள்ளி முடிந்து சங்கத்திற்கு செல்வதற்குள் பல சிறுவர்கள் முந்தி வந்து எல்லா விளையாட்டுகளில் இடம் பிடித்திருப்பார்கள். எனக்கு விளையாட வாய்ப்பே கிடைக்காது. அவர்களோடு சண்டை போட்டு இடம் பிடிக்கும் திராணியும் எனக்கு கிடையாது. விளையாடுபவர்களை பார்த்து விட்டு வீட்டிற்கு செல்வதே  வாடிக்கையாக இருக்கும்.
ஒரு சில நேரங்களில் முந்தி சென்று இடம் பிடித்து விளையாடுவதும் உண்டு. பல நேரங்களில் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாந்து வீடு திரும்புவதும் உண்டு.  அதே சங்கத்தில் ஒரு சிறிய நூலகம் இருப்பது தெரியவந்தது. அந்த ஒரு இடத்தில் மட்டுமே போட்டிக்கு ஆளே இல்லை. எப்போது பார்த்தாலும் அந்த நூலகம் வெறிச்சோடி இருக்கும். நிர்வாகியிடம் விசாரித்தேன். எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்து படிக்கலாம். படித்து முடித்த பிறகு புத்தகத்தை இங்கேயே கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று பதில் அளித்தார்.
முதலில் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தேன். என்ன புத்தகம் என்பது நினைவில் இல்லை. புத்தக வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டதையடுத்து விளையாடுபவர்களை பார்ப்பதோடு நின்று கொண்டேன். அதுவே பின்னாளில் விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் செய்து விட்டது.
தொடர்ந்து புத்தகங்களை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
எனது ஆர்வத்தை கண்ட சங்க நிர்வாகி புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கும் அளவுக்கு சுதந்திரம் தந்தார். நானும் தொடர்ந்தேன். நடுநிலைப்பள்ளிப் படிப்பு முடிந்து உயர்நிலைப்பள்ளிக்கு சென்றேன். அங்கிருந்த நூலகத்தில் புத்தகங்களை தேடிப் பிடித்து படித்தேன். பள்ளிப் படிப்பு முடிந்தபிறகு பொது நூலகங்களை நாட தொடங்கினேன். நாளிதழ், வார இதழ்கள் என படிக்கத் தொடங்கினேன்.
என் சக்திக்கேற்ற வகையில் புத்தகங்களை காசு கொடுத்தும் வாங்கிப் படித்தேன். பத்து வயதில் தொடங்கிய வாசிப்பு பழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது நான் பணியாற்றும் பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் நிறுவனத்தின் மூலம் பல்வேறு தரமான  புத்தகங்களை படித்து இன்புறுகிறேன்.

காலங்கள் உருண்டோடியது. நான் காசிமேடு பகுதியிலிருந்து வெளியேறி பல ஆண்டுகளாகி விட்டது. எப்போதாவது நண்பர்களை காண வேண்டும் என்று நினைத்து செல்வேன். அப்போதெல்லாம் நான் வாழ்ந்த பகுதியா இது என்று வியந்திருக்கிறேன். மிகப் பெரிய மாறுதல். குடிசைகளாக இருந்த இடங்களில் பெரிய பெரிய மாளிகைகள். முன்பு நான் விவரித்ததைப் போன்ற ஒரு அடையாளம் கூட இன்று காணப்படவில்லை. என் தலைமுறையைத் தொடர்ந்து எனக்கு பின் வந்த தலைமுறையினர் படிப்பில் ஆர்வம் காட்டினர். தங்களின் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டனர். வீட்டுக்கொரு பட்டதாரி உருவாயினர். புத்தகங்களில் அறிவைத் தேடியவர்கள் இன்று கம்ப்யூட்டர் உதவியுடன் தங்களின் தேடலைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அரசுப்பணி உள்ளிட்ட உயர்ந்த பதவிகளையும் பிடித்து வருகின்றனர். மனதில் நிழலாடிய பழைய நினைவுகளை நினைத்தபோதும் சரி, தற்போதையை காசிமேடு பகுதியின் வளர்ச்சியும் சரி மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.
என் மனதிற்கு சுகம் தருகிறது என்பதாலும், வாழ்க்கைக்குத் தேவையான நல்லவைகள் கிடைக்கின்றன என்பதாலும் வாசிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
புத்தகங்களில் தொடங்கியது இன்று வலைத்தளங்களில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

நல்ல நூல்களை வாசிப்போம்,
உயிர் வாழ காற்றை சுவாசிப்பதைப் போல்.

உலகப் புத்தக தினம் நாடு முழுவதும் கடைப்பிடிப்படுவதையொட்டி எனது வாசிப்பு பழக்கம் குறித்து சிந்தித்தபோது எனக்குள் உதித்ததுதான் இந்தப் பதிவு.