வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. !

25 பிப்ரவரி 2012

தவறுக்கான தண்டனை?


சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதிலும் தற்போது  அதிகம் பேசப்படும் விஷயம் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதுதான்.
போலீசார் சுட்டுக் கொன்றது  சரியில்லை என சிலரும், சரி என பலரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து அரசின் சம்பிரதாய நடவடிக்கைகள் ஒரு பக்கம்  தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம் இது மனித உரிமை மீறல் என குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும், இன்னும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இன்று பகல் 12 மணியளவில் (அரசின் ஒருமணி நேர மின்வெட்டின்போது) எனது அலுவலகத்தில் நானும், ஆசிரியர் திரு.யாணன் மற்றும் அய்யா தமிழ்மறையான் அவர்களும் பேசிக் கொண்டிருந்தோம்.
என்ன தலைவரே சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 4 பேரின் உடல்கள் அடையாளம் தெரியலையாமே? பீகார் முதலமைச்சர் கூட இதுபற்றி என்னவோ சொல்லியிருக்கிறாரே என நான் ஆரம்பித்தேன்.
ஆமாங்க, ஒருத்தனையாவது உயிரோடு பிடித்திருக்கலாம் என அய்யா தமிழ்மறையானும் தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்.
அய்யா, இது சரியான தண்டனைதான் என்றார் ஆசிரியர் யாணன்.
செத்தவர்களைப் பற்றிய எல்லா தகவல்களையும் சேகரித்துக் கொண்ட பிறகுதான் போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
உங்க கருத்துப்படி, மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை உயிரோடு பிடித்து வழக்குப் போட்டார்கள். காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் கொலை வழக்கில் ஜெயேந்திரர் மீதும் வழக்குப் போடப்பட்டிருக்கிறது. இதுபோல் எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேர விரயம், பண விரயம் என இழுத்தடிக்கப்படுகிறது.
மலேசியாவில் கடந்த தைப்பூச நாளில் தமிழகத்திலிருந்து பிழைக்கச் சென்ற இரண்டு இளைஞர்களுக்கு இடையே போதையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரின் உடல் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைக் கைது செய்தனர். இந்த வழக்கு ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டு கொலையாளி தூக்கிலிடப்பட்டார். இது சரியான தண்டனைதான் என ஒரு பத்திரிகையின் தலையங்கத்தில் எழுதியிருந்ததை தான் படித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சில கருத்துக்களையும் ஆசிரியர் தெரிவித்தார்.
அதற்குள் மின்தடை சரியாகி விடவே மற்ற பணிகளை மேற்கொண்டோம்.
பணி முடிந்து வீடு திரும்பினேன்.
பகலில் நாங்கள் பேசிக் கொண்ட விஷயம் குறித்து சிந்தித்தேன். வேதனையாகத்தான் இருந்தது.
சென்னையில் வசிப்பவர்கள் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி பணத்தைச் சேர்த்து வைத்து வங்கியில் செலுத்துகின்றனர். கொஞ்சமும் ஈவு இறக்கமின்றி துப்பாக்கி முனையில் அந்தப் பணத்தைக் கொள்ளையடித்துச் செல்லும் மனப்போக்கு உள்ளவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்?. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தண்டனை தேவைதான்.
ஒருவேளை அவர்களை உயிரோடு பிடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வழக்கு ஆண்டுக்கணக்கில் நடந்திருக்கும். குற்றம் நிரூக்கப்பட்டால் சிறை தண்டனை கிடைத்திருக்கும். தண்டனை முடிந்து வெளியே வந்து அவன் ஒரு புத்தனாகவோ, இயேசுவாகவா மாறியிருப்பானா என்றால் நிச்சயம் மாறியிருக்க மாட்டான். அவன் அடுத்த கொள்ளைக்கு தன்னை தயார்படுத்தி ஈடுபடுவான். அதற்கும் மேலாக கொலைகளைக் கூட மிக எளிதாக மேற்கொள்வான்.
இந்த இடத்தில் ஒன்றை நான் சொல்லியே ஆக வேண்டும். நான் குடியிருக்கும் பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்கள், ஆட்டோவில் இருக்கும் பேட்டரிகள் திருடப்படுகின்றன. இன்னும் கேவலமாக குறிப்பிட வேண்டுமானால் சைக்கிளில் உள்ள பிரேக் கட்டைகள் கூட திருடப்படுகின்றன. 
ஆட்டோவில் பேட்டரி திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கச் சென்றபோது, உனக்கு யார் மீதாவது சந்தேகமாக இருந்தால், அவன் பெயரை எழுதிக் கொடு. நடவடிக்கை எடுக்கிறோம் என புகார் கொடுக்கச் சென்றவரிடம் போலீசார் கூறுகின்றனர்.
இதனால் எங்கள் பகுதியில் பொருட்கள் திருட்டுப் போனாலும் பலர் போலீசாரிடம் செல்ல விரும்புவதில்லை. இது திருடர்களுக்கு சாதகமாக போய் விடுகிறது.
ஒருவேளை போலீசார்  வங்கிக் கொள்ளையர்கள் மீது என்கவுண்டர் நடத்தாமல் இருந்திருந்தால், எங்கிருந்தோ வந்தவர்கள் இங்குள்ள வங்கியில் கொள்ளையடிக்கும் போது நான் ஏன் அதை செய்யக்கூடாது என்ற எண்ணம் சைக்கிள் பிரேக் கட்டை திருடனுக்கும் வருமல்லவா?
தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும். அதற்கான தண்டனையும் அவன் அடையணும்.
குற்றம் செய்தவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவன் மீது  தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நமது நாட்டில் இப்போது இருக்கும் சட்டங்களே போதும். அவற்றை முறையாக பயன்படுத்தினாலே குற்றங்களை மேற்கொள்பவர்கள் தங்களை திருத்திக் கொள்வார்கள்.





12 பிப்ரவரி 2012

புதைகுழி

மனித வாழ்க்கையில் அன்பு என்பது மகத்தானது. சக மனிதனை மதிப்பதில்தான் உண்மையான அன்பு அடங்கியிருக்கிறது.இந்த அன்புக்கு காதல் என்று சிலர் விளக்கம் சொல்கின்றனர்.
காமத்தின் தொடக்கம்தான் காதல் என்று கூறுவோரும் உண்டு. காலம் காலமாக இதுபோல் கூறப்பட்டு வருகிறது.
முதலில் தனிமை, பிறகு அண்மை, இணங்கினால் இனிமை, மறுத்தால் வன்மை என்று, இனக்கவர்ச்சியில் துவங்கி, காமத்தில் முடிந்து, வாழ்வை கண்ணிமைக்கும் நேரத்தில், கனக்க செய்துவிடும் என்று ஒரு வலைப்பதிவர் தனது வலைப்பூவில் காதலைக் குறித்து மிக அழகாக  பதிவு செய்திருக்கிறார். (அவருக்கு நன்றி..)
எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த காதல் நல்லதா? கெட்டதா?
காதலித்துக் கொண்டிருப்பவர்கள் நல்லது என்றும், அதில் விழுந்து எழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் கெட்டது என்றும் கூறுவர். காதலில் வெற்றி பெற்றதாக கூறி கொண்டு உண்மையில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் நூற்றுக்கு 99.9 சதவீதத்தினர் என்பது மறுக்க முடியாத உண்மை. மீதமுள்ள .1 சதவீதத்தினர் மகிழ்ச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் உண்மை.
டீன் ஏஜ் என்று சொல்லப்படும் 13 வயதிலிருந்து 19 வயது வரை உள்ளவர்களின் உடலுக்குள் ஹார்மோன் செய்யும் ரசாயன மாறுதலை தான் காதல் என்று கூறுகின்றனர். அந்த வயதில் எதிர்பாலினர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படும். அந்த இனக்கவர்ச்சி காதலாகாது. இன்னும் சொல்லப்போனால் அந்த வயதில் ஒரு எழவும் புரியாது என்பதுதான் உண்மை.

எனது பள்ளியிறுதி வகுப்பில் ஆசிரியர் கூறியது இது.
டீன் ஏஜில் ஒரு பெண்ணை பார்க்கும் போது ஆணுக்கும், ஆணைப் பார்க்கும்போது பெண்ணுக்கும் ஒருவித கவர்ச்சி வரும். அதனை தவறாக புரிந்துக் கொள்ளும் ஆணோ, பெண்ணோ நிச்சயம் தடுமாறுவர். இதனால் அவர்களின் வாழ்வு சீரழியும். அந்த அழிவில் இருந்து அவர்களால் மீண்டும் எழவே முடியாது.
இன்றும் அது என் மனதில் பசுமையாக இருக்கிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பதை என் வாழ்நாளில் பலரின் வாழ்க்கையை பார்த்து தெரிந்துக் கொண்டுள்ளேன்.
திரைப்படங்களில் காட்டப்படும் காதல் என்பது வாழ்க்கைக்கு ஒத்துவராது. சினிமாக்காரர்களும் தெரிந்தே இந்த தவறை செய்துக் கொண்டிருக்கின்றனர். இதை அடியொற்றிதான் இன்றைக்கு இளைய சமுதாயம் தங்கள் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காதல் அவசியமா?
படிக்கும்போது காதல் அவசியமா என்று  கல்லூரி பெண்களிடம் கேட்டபோது, கண்டிப்பா தவறானதுதான். அதையும் மீறி காதலித்தால் நம்முடைய லட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாது. படிப்பும் வராது. முழுக்க முழுக்க காதலன் அல்லது காதலியைத்தான் மனம் தேடும். யார் என்ன சொன்னாலும் காதில் விழாது. தன்னிலை மறந்து போவார்கள் என்று பதில் அளித்தனர். ( நன்றி தினத்தந்தி- முத்துச்சரம், பிப்.11 இதழ்)
அவர்களின் கூற்றுபடி படிக்கும்போதே காதலிப்பதாக கூறி கொண்டு இன்றைக்கு எத்தனையோ பேர் தங்களின் வாழ்க்கையை  கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
சரி, ஆண்டுதோறும் காதலர் தினம் (பிப்.14 ) என்ற ஒருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறதே? இது அவசியம் தானா என்று ஒரு கணம் சிந்தித்தால்,  திருமண வாழ்க்கைக்கு முன்பே காதலின் பெயரால் இளையோரை ( வாலிப பெண்கள், ஆண்கள்) ரோட்டுக்கு வரவழைத்து தவறான வழியில் கொட்டமடிக்க செய்யும் ஒரு கலாசார சீரழிவு. இது தேவையற்றது என்றே பலர் கூறுகின்றனர்.
கி.பி. இருநூறாம் நூற்றாண்டின் மத்தியில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த கிளாடியஸ் என்னும் மன்னனின் ஆட்சிக் காலத்தில் மக்கள் இராணு வத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான்.இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.  மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள்  சிறையி லடைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

காதலுக்கு ஆதரவு தெரிவித்ததன் விளைவால் உயிரிழந்த ஒரு பாதிரியாரின் நினைவுநாள் தான் காதலர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
வியாபார நிறுவனங்கள் அந்த நாளுக்காக காதலர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி தங்களின் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்கின்றன.
காதலர் தினத்தில் என்னதான் செய்வார்கள்? என்று நண்பர்கள் சிலரிடம் கேட்டபோது, தனக்கு ஒரு காதலியோ, காதலனோ இருப்பதை மற்றவர்களுக்கு பிரகனப்படுத்துவார்கள். பரிசு பொருட்களைக் கொடுத்து தங்களை விட்டு ஓடி விட கூடாது என்று கவனமாக இருப்பர். அன்று முழுவதும் டுவீலரில் அட்டைப் பூச்சிகளைப் போல் ஒட்டி உரசி, காண்பவர் கண்கள் கூசும் அளவிற்கு உரெல்லாம் சுற்றி கொட்டமடிப்பர். காதலில் தோற்றதாக கூறிக் கொள்பவர்களோ தங்களின் உடைந்து போன காதலை நினைத்து ஏங்குவர் என்று தெரிவித்தனர்.
இப்படி ஒரு நாள் தேவைதானா என இளைய சமுதாயம் சற்று சிந்திக்க வேண்டும்.
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும், பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார். (ஆதியாகமம்-1:27)
இறைவன் மனிதனை உலகில் படைத்தபோது அவனை மகிழ்ச்சியாய் வாழ வைக்கவே விரும்பினார். அதனால் தான் மனிதன் தனித்து இருப்பது நல்லதல்ல. அவனுக்கு ஓர் துணையை உருவாக்க வேண்டும் என்று நினைத்து, அவனின் விலா எலும்பிலிருந்து பெண்ணை உருவாக்கி தந்தார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயம் ஒர் துணை உண்டு. அதைத்தான் தேவனும் நிர்ணயித்திருக்கிறார். நீங்களாக உங்கள் வாழ்க்கைக்கு ஒத்துவராத ஒருவரை துணையாக தேடாதிருங்கள்.  வாழ்க்கையில் சரியான ஒரு துணையை கடவுள் ஏற்படுத்தி தரும் வரை காத்திருங்கள்.
காதல் என்ற புதைகுழியில் விழுந்து மீண்டவர்களை விட மாண்டவர்களே அதிகம் நினைவில் கொள்ளுங்கள்.
வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.

03 பிப்ரவரி 2012

படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்





ஒரு தனி விமானத்தில் விஞ்ஞானிள் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் பைபிளை (பரிசுத்த வேதாகமம்) படித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மற்றொரு விஞ்ஞானி, இப்போது உள்ள அறிவியல் உலகத்தில் கடவுள், பைபிள் என்று படித்துக் கொண்டு இருக்கிறீரே? என்று கேட்டு விட்டு, தனது முகவரியை கொடுத்து, இனியாவது கடவுளைத் தூக்கிப் போட்டு விட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
விமானம் தரை இறங்கியவுடன் மீண்டும் அவரை சந்தித்த விஞ்ஞானி உங்கள் முகவரியை கொடுங்கள் நான் வந்து பார்க்கிறேன் என்றார். அவர் தனது விசிட்டிங் கார்டை கொடுத்தார். அதில் தாமஸ் ஆல்வா எடிசன் என்று இருந்தது. உடனே அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன், அவரை தனியாக வீட்டில் சந்திக்க நாளையும் பெற்றுக் கொண்டு சென்றார்.
குறிப்பிட்ட நாளில் அந்த விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா எடிசன் வீட்டிற்கு சென்றார். அங்கு ஏராளமான கண்டுபிடிப்புகள் இருந்தன. அவற்றை பார்த்து, நீங்கள் தானே இதை செய்தது என்று கேட்டார். அதற்கு இல்லை நான் ஒரு நாள் வெளியில் சென்று விட்டு, மீண்டும் வந்து வீட்டு கதவை திறந்த போது இதெல்லாம் இருந்தது என்றார்.
படைப்பு இருந்தால் கண்டிப்பாக படைப்பாளியும் இருப்பார் என்று விஞ்ஞானி கூறினார். பின்னர் தாமஸ் ஆல்வா எடிசன், தான் கண்டுபிடித்ததை ஒப்புக் கொண்டார்.
இது ஒரு கதை.
இந்த கதையை சொன்ன மனிதர் ரஜினிகாந்த்.
கனடா நாட்டின் இயல் விருதை பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 02.02.2012 அன்று சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசும் போது ரஜினிகாந்த் இந்த கதையை கூறினார்.
தொடர்ந்து அவர், இதை கதையாக நினைக்க வேண்டாம். விஞ்ஞானி கூறியதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும், படைப்பு என்று ஒன்று இருந்தால் அதை படைத்த படைப்பாளியும் கண்டிப்பாக இருப்பார். எனவே கடவுள் இருப்பது உண்மை என்றும் கூறினார்.
நன்றி ரஜினிகாந்த் அவர்களே...
(கடவுளின் ஞானத்தைப் பெற்றே உலகிற்கு பல்வேறு கண்டுபிடிப்புகளை கொடுத்துள்ளார் எடிசன் என்பது குறிப்பிடத்தக்கது) 

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
இந்த விவாதம் காலகாலமாய் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிமிடம் வரை நாசியில் சுவாசத்தைப் பெற்று உயிரோடு வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள், கடவுளின் அன்பையும், அவரின் அளவில்லாத கிருபையையும் பெற்று உணர்ந்தவர்கள் அவர் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
சுவாசம் நின்று போனால் எல்லாம் போய் விடும் என்று தெரிந்திருந்தும், அறிவியலின் துணை கொண்டு படைப்புகள் அனைத்தின் முற்காலம், தற்காலம் குறித்து அறிந்திட முனைவோர் அப்படி ஒருவன் இல்லை என்று வாதிடுகின்றனர். காலத்தின் மாற்றத்தில் இவ்வாறு விவாதம் செய்தவர்கள் படைத்தவனை உணர்ந்து கடவுளாக ஏற்று வாழ தொடங்குகின்றனர்.

மனிதனை நல்வழிப்படுத்த அனைத்து மதங்களும் கடவுள் ஒருவர் உண்டு என்று வலியுறுத்துகின்றன.
ஒவ்வொரு படைப்பையும் உற்று நோக்கும் போது அதில் படைத்தவனின் கலையம்சம் நிச்சயம் தெரியும்.
படைப்பிற்கான நோக்கமும் அதில் இருப்பது தெரியவரும்.

அறிவியல் வளர்ச்சியில் ஆண்டவன் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு.  ஏற்கனவே படைக்கப்பட்டவற்றை அடிப்படையாக கொண்டுதான் அறிவியல் ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கடவுள் மனிதனை படைக்கவில்லை. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று கூறுகின்றனர். அதை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால்கூட, பரிணாம வளர்ச்சியில் இன்று குரங்கினமே அழிந்து இருக்க வேண்டும். எல்லா குரங்குகளும் மனிதர்களாக மாறி இருக்க வேண்டும். ஆனால் மனித இனம், குரங்கினம் ஆகிய இரண்டு இனங்களும் இன்றும் தொடர்ந்து பெருகி கொண்டிருக்கின்றனவே எப்படி?
வாதம் செய்ய நான் இதை கூறவில்லை. அது என் நோக்கமும் இல்லை.
என்னுடைய அறிவுக்கு எட்டியதை எழுதுகிறேன்.
படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க- இந்த சிம்பிள் லாஜிக் புரிந்தாலே போதும் கடவுள் உண்டு என்பதற்கு.
பரிசுத்த வேதாகமத்தின் (பைபிள்) தொடக்கமே படைப்பு குறித்தது தான். ஆறு நாட்கள் படைப்புத் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. ஏழாம் நாள் ஓய்வு.
படைப்பின் அனத்து விவரங்களும் ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

தேவன் கரத்தின் கிரியைகள் நாம்

ஆண்டவனின் கை தேர்ந்த படைப்பு மனிதன்.
மனிதனின் உடல் அமைப்பே இதற்கு சான்று.
தலை முதல் கால் வரை எந்த இடத்தில் எந்த உறுப்பு இருக்க வேண்டும், எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயித்தது யார்? அவை எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், அதற்குறிய விதிகளை அமைத்ததும் யார்?
பல்லாயிரம் கேபிள்களை போல நாடி நரம்புகளை மேனிக்கு உள்ளே அமைத்தது யார்? அவற்றிற்கு இயக்கம் தந்தது யார்? நாசியில் சுவாசம் உள்ளவரை இவற்றின் இயக்கங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் யார்?
இப்படி எத்தனையோ யார்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவை அனைத்திற்கும் ஒரே பதில் இறைவன் என்பதுதான்.

எத்தனையோ வழிகளில் இறைவனும் தன்னை உணர்த்திக் கொண்டே இருக்கிறார். மனித மனம்தான் அதை உணர மறுக்கிறது.

படைத்த அனைத்துமே படைத்தவனின் நோக்கம் அறிந்து தன்னுடைய வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறது மனிதனைத்தவிர.
இதை உணர்ந்தவர்கள் கடவுளின் துணையோடு உயர்ந்த வாழ்வு வாழ்கின்றனர். அப்படி வாழ்பவர்களில் ஒருவரே ரஜினிகாந்த். கடவுளை உணர்ந்த அவர், அதை உரைத்திட்டார் உலகுக்கு.
இல்லை என்போர் எதைக் கூறினாலும் ஏற்க மாட்டார்கள். அவர்களும் கடவுளை உணரும் நாள் நிச்சயம் வ்ரும்.

தேவனின் பரிசுத்த நாமத்திற்கு
கோடான கோடி நன்றி.

01 ஜனவரி 2012

இத்தனை அடாவடிகளா?





புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை (01.01.2012) தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன்.
வண்ண வண்ண விளக்குகளின் வர்ணஜாலங்களும், விண்ணில் வெடித்துச் சிதறிய பட்டாசுகளின் ஒளிவெள்ளமும், புத்தாண்டை வரவேற்கும்போது மக்களின் முகத்தில் பிரதிபலித்த மகிழ்ச்சியும், ஆரவாரமும் உலகம் முழுவதும் நடந்த புத்தாண்டுக் கொண்டாட் டங்களின் நிகழ்ச்சிகளாக காட்டப்பட்டன.
உள்ளூர் செய்திகளின் வரிசையில் சென்னை மெரீனாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டமும், பெரிய பெரிய ஹோட்டல்களில் நடந்த மது விருந்துகளும், குடி போதையில் இளசுகள் போட்ட அரைகுறை ஆபாச அசிங்கங்களும், ஹேப்பி நியூ இயர் என காட்டுக் கத்தலாக டூவீலரில் சிலர் கத்திக் கொண்டுச் சென்றதையும் காண நேர்ந்தது.
ஆண்டுதோறும் வாடிக்கையாக வந்து செல்லும் ஒரு நிகழ்வுக்காக இத்தனை அடாவடிகளா?... அப்பப்பா…
தொடர்ந்து வந்த செய்தியில்…
வட தமிழக மாவட்டங்களை சூறையாடி, சின்னபின்னமாக்கிய தானே புயலின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களும் ஒளிபரப்பாகின. பால், நீர், மின்சாரம், இருக்க இடமின்றி, சாப்பிடுவதற்கு உணவின்றி மக்கள் பரிதவிக்கும் காட்சிகள் மனதை வெகுவாக பாதித்தது.
பயிர்கள் நீரில் மூழ்கி, சூறாவளிக் காற்றில் வாழை, கரும்பு, முந்திரி பயிர்கள் முற்றிலும் நாசமானதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதும் புத்தாண்டு சோகக் காட்சிகளாக பதிவாயின.
நாகரீகம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவுக் கொண்டாட்டங்கள் ஒருபுறம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சோகத்தில் சிக்கித் தவிக்கும் மனித ஜீவன்கள் மறுபுறம்.
இதுதான் வாழ்க்கை!

30 டிசம்பர் 2011

மகிழ்ச்சி எங்கே?










நாளிதழ்களில் வண்ண வண்ண விளம்பரங்கள் சிறப்பு தள்ளுபடிகளை சகஜமாய் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகளும் தங்கள் பங்குக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு  நேயர்களை தங்கள் பக்கம் இழுக்க போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. ஹோட்டல்களும் சிறப்புக் கொண்டாட்டங்களுக்காக தேனூற கூவி கூவி அழைப்பு விடுக்கின்றன. இளவட்டங்களை தங்கள் வசப்படுத்த செல்பேசி நிறுவனங்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்ப சிறப்பு சலுகைகளை குறுஞ்செய்திகளாக அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
உலகமே ஆவலோடு மகிழ்ந்து கொண்டாடவிருக்கும் புத்தாண்டு விழா களைகட்ட தொடங்கி விட்டதன் அறிகுறிதான் இவை.
கடக்கும் ஆண்டின் இறுதி நொடிக்கும் புதிய ஆண்டின் ஆரம்ப நொடிக்குமான கொண்டாட்டம்தான் இவ்விழா.
இதற்காகதான் முற்பகுதியில் நான் குறிப்பிட்ட அத்தனை ஏற்பாடுகளும்.
வருடத்திற்கு ஒருமுறை இது வாடிக்கை என்ற நிலையில் அவரவரின் மனநிலைக்கேற்றபடி கொண்டாட்டங்கள் இருக்கும்.
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அந்த இறுதி நொடிப்பொழுதை ஆண்டவனின் பாதத்தில் அர்ப்பணித்து கடந்த ஆண்டில் தாங்கள் பெற்ற உயர்வை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறி புதிய ஆண்டை வரவேற்பர்.
வாழ்க்கை வாழ்வதற்கே, ஆடும் வரை ஆட்டம், உலகம் பிறந்தது எனக்காக என்றிருப்பவர்கள் டாஸ்மாக் கடைகளிலோ, ஆடம்பர ஹோட்டல்களிலோ குடித்து வெறித்து புத்தாண்டை வரவேற்பதாக நினைத்து மண்ணில் தலைக்குப்புற வீழ்ந்துக் கிடப்பர்.
(காவல்துறை பல்வேறு கட்டுபாடுகளை விதித்தும், ஆடம்பர ஹோட்டல்களுக்கு ஏகப்பட்ட விதிமுறைகளை கூறி அவற்றை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம்)
இன்னும் சிலரோ போதை தலைக்கேறிய நிலையில் டூவீலரை தாறுமாறாக ஓட்டி வழியில் காண்போருக்கு  வாழ்த்து கூறுவதாக நினைத்துக் கொண்டு என்ன சொல்கிறோம் என்பதுகூட தெரியாமல் உளறி எங்கேயாவது மோதி புத்தாண்டை மருத்துவமனைகளில் கொண்டாடுவர்.
இளசுகளோ கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தும் வகையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பேயாட்டம் ஆடி மகிழ்வர்.
இத்தனை வகையான கொண்டாட்டங்களிலும் ஒரே எதிர்பார்ப்பு மகிழ்ச்சி மட்டுமே. மகிழ்ச்சியை அடைவதற்கு மனிதன் எத்தனையோ வகைகளை கையாள்கிறான்.
எல்லா உயிரினங்களுக்கும் மகிழ்ச்சி என்பது இறைவனால் அருளப்பட்ட ஒன்றாகும். ஆறரறி கொண்ட மனிதன் மாத்திரம் அது தனக்கு மட்டுமே சொந்தம் என்பதை போல உரிமைக் கொண்டாடி அதை பல இடங்களில் தேடி அலைந்துக் கொண்டிருக்கிறான்.
 இதுபோன்ற வீணான கொண்டாட்டங்களில் கிடைக்கும் சிறிது நேர மகிழ்ச்சியை நிரந்தரம் என நினக்கிறான். உலகில் இன்றைக்கு பெரும்பாலானோர் மகிழ்ச்சியை தேடி தவறான பாதையில் ஓடி வீணாகிறார்கள்.
வீட்டில் மனைவி, பிள்ளைகளை சாப்பாட்டிற்கு தவிக்க விட்டுவிட்டு டாஸ்மாக் கடைகளிலும், ஆடம்பர ஹோட்டல்களிலும் பணத்தைக் கொடுத்து மகிழ்ச்சியையும், இன்பத்தையும் தேடி சாக்கடைகளில் வீழ்ந்துக் கிடக்கின்றனர்.
பெற்றோரின் பேச்சை கேட்க மறுத்து, அவர்களை உதாசீனப்படுத்தி விட்டு வீண் பெருமைக்காக இதுபோன்ற  கொண்டாட்டங்களில் பிள்ளைகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இது உண்மையான மகிழ்ச்சியா?
 உண்மையான மகிழ்ச்சி எங்கிருக்கிறது?
திரும்பும் பக்கமெல்லாம் மகிழ்ச்சிக் கொட்டிக் கிடக்கிறது. எத்தனையோ நேரங்களில் என்னை எடுத்துக்கொள் என்று அது கண்சிமிட்டி அழைக்கிறது. நமக்கு அது தெரிந்தாலும் நாம்தான் அதை எடுத்துக்கொள்ள மறுக்கிறோம்.
ஒர் ஆண்டைபோலவே ஒவ்வொரு நாளும் பிறக்கிறது. கண் விழிக்கும் நொடி, அதைத் தொடர்ந்து வரும் நிமிடம், மணிநேரம், பொழுது என எல்லாம் இன்பமானவையாகவே இருக்கிறது.
கவலை சிறிதுமில்லாத சிரித்து மகிழும் குழந்தையின் முகத்தில், நம் மீது வீசி செல்லும் காற்றில், அழகான மலர்களில், மனதை வருடும் இனிய இசையில் என நம்மைச் சுற்றி கொட்டிக் கிடக்கும் மகிழ்ச்சியை அந்த நாள் முழுவதும் அனுபவிக்க ஏன் முயற்சி செய்ய மறுக்கிறோம்.
நாளின் முடிவில் அதாவது படுக்கைக்கு போகும் முன்பு அந்த நாளில் நிகழ்ந்தவைகளை ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்ப்போம். மகிழ்ச்சியான தருணங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
(நீதிமொழிகள் 21:23) தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான் என்னும் வேத வாக்கினை இதயத்தில் நிறுத்தி,
அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தால், அவர்களின் மகிழ்ச்சிக்கு குந்தகம் விளைவித்திருந்தால் இறைவனிடம் மன்னிப்பு கேட்போம். மனதில் பாரமின்றி தூங்க செல்வோம்.
ஒவ்வொரு நாளின் முடிவில் இப்படி சுய பரிசோதனை செய்வோம். தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து விடுவோம்.
நாசியில் சுவாசத்தோடு மீண்டும் ஒரு புதிய நாளுக்குள் நுழைவோம். இப்படி செய்வதால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ள் முடியும்.

புத்தாண்டை மகிழ்ச்சிக்காக கொண்டாடுவோரே, இந்த நொடியில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி, இன்பத்தை அந்த ஆண்டு முழுவதும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?

நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் வெறும் சடங்கிற்காக வாழ்த்துவதை தவிர்த்து காணும் போதெல்லாம் அவர்களை மனதார வாழ்த்துவோம்
புதிய ஆண்டை வரவேற்று கொண்டாடவிருக்கும் நாம் இவைகளை மனதில் நிறுத்துவோம்.

மகிழ்ச்சியை பற்றி நினைப்போம்மகிழ்ச்சியாக இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுவோம்மகிழ்ச்சியை நம்புவோம்மகிழ்ச்சியை நிலை நிறுத்துவோம்அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்போம். 

 "செய்வதற்குச் சில, நேசிப்பதற்குச் சில, மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில, இவைகளே மகிழ்ச்சியின் உன்னத அத்தியாவசியத் தேவைகள்."  - Allan K. Chalmers 

"செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை."  - Benjamin Disraeli 

உன்னுடைய உழைப்பும் சொற்களும் உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில் மகிழ்ச்சி வருகிறது.  – Buddha