வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. !

12 பிப்ரவரி 2012

புதைகுழி

மனித வாழ்க்கையில் அன்பு என்பது மகத்தானது. சக மனிதனை மதிப்பதில்தான் உண்மையான அன்பு அடங்கியிருக்கிறது.இந்த அன்புக்கு காதல் என்று சிலர் விளக்கம் சொல்கின்றனர்.
காமத்தின் தொடக்கம்தான் காதல் என்று கூறுவோரும் உண்டு. காலம் காலமாக இதுபோல் கூறப்பட்டு வருகிறது.
முதலில் தனிமை, பிறகு அண்மை, இணங்கினால் இனிமை, மறுத்தால் வன்மை என்று, இனக்கவர்ச்சியில் துவங்கி, காமத்தில் முடிந்து, வாழ்வை கண்ணிமைக்கும் நேரத்தில், கனக்க செய்துவிடும் என்று ஒரு வலைப்பதிவர் தனது வலைப்பூவில் காதலைக் குறித்து மிக அழகாக  பதிவு செய்திருக்கிறார். (அவருக்கு நன்றி..)
எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த காதல் நல்லதா? கெட்டதா?
காதலித்துக் கொண்டிருப்பவர்கள் நல்லது என்றும், அதில் விழுந்து எழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் கெட்டது என்றும் கூறுவர். காதலில் வெற்றி பெற்றதாக கூறி கொண்டு உண்மையில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் நூற்றுக்கு 99.9 சதவீதத்தினர் என்பது மறுக்க முடியாத உண்மை. மீதமுள்ள .1 சதவீதத்தினர் மகிழ்ச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் உண்மை.
டீன் ஏஜ் என்று சொல்லப்படும் 13 வயதிலிருந்து 19 வயது வரை உள்ளவர்களின் உடலுக்குள் ஹார்மோன் செய்யும் ரசாயன மாறுதலை தான் காதல் என்று கூறுகின்றனர். அந்த வயதில் எதிர்பாலினர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படும். அந்த இனக்கவர்ச்சி காதலாகாது. இன்னும் சொல்லப்போனால் அந்த வயதில் ஒரு எழவும் புரியாது என்பதுதான் உண்மை.

எனது பள்ளியிறுதி வகுப்பில் ஆசிரியர் கூறியது இது.
டீன் ஏஜில் ஒரு பெண்ணை பார்க்கும் போது ஆணுக்கும், ஆணைப் பார்க்கும்போது பெண்ணுக்கும் ஒருவித கவர்ச்சி வரும். அதனை தவறாக புரிந்துக் கொள்ளும் ஆணோ, பெண்ணோ நிச்சயம் தடுமாறுவர். இதனால் அவர்களின் வாழ்வு சீரழியும். அந்த அழிவில் இருந்து அவர்களால் மீண்டும் எழவே முடியாது.
இன்றும் அது என் மனதில் பசுமையாக இருக்கிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பதை என் வாழ்நாளில் பலரின் வாழ்க்கையை பார்த்து தெரிந்துக் கொண்டுள்ளேன்.
திரைப்படங்களில் காட்டப்படும் காதல் என்பது வாழ்க்கைக்கு ஒத்துவராது. சினிமாக்காரர்களும் தெரிந்தே இந்த தவறை செய்துக் கொண்டிருக்கின்றனர். இதை அடியொற்றிதான் இன்றைக்கு இளைய சமுதாயம் தங்கள் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காதல் அவசியமா?
படிக்கும்போது காதல் அவசியமா என்று  கல்லூரி பெண்களிடம் கேட்டபோது, கண்டிப்பா தவறானதுதான். அதையும் மீறி காதலித்தால் நம்முடைய லட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாது. படிப்பும் வராது. முழுக்க முழுக்க காதலன் அல்லது காதலியைத்தான் மனம் தேடும். யார் என்ன சொன்னாலும் காதில் விழாது. தன்னிலை மறந்து போவார்கள் என்று பதில் அளித்தனர். ( நன்றி தினத்தந்தி- முத்துச்சரம், பிப்.11 இதழ்)
அவர்களின் கூற்றுபடி படிக்கும்போதே காதலிப்பதாக கூறி கொண்டு இன்றைக்கு எத்தனையோ பேர் தங்களின் வாழ்க்கையை  கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
சரி, ஆண்டுதோறும் காதலர் தினம் (பிப்.14 ) என்ற ஒருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறதே? இது அவசியம் தானா என்று ஒரு கணம் சிந்தித்தால்,  திருமண வாழ்க்கைக்கு முன்பே காதலின் பெயரால் இளையோரை ( வாலிப பெண்கள், ஆண்கள்) ரோட்டுக்கு வரவழைத்து தவறான வழியில் கொட்டமடிக்க செய்யும் ஒரு கலாசார சீரழிவு. இது தேவையற்றது என்றே பலர் கூறுகின்றனர்.
கி.பி. இருநூறாம் நூற்றாண்டின் மத்தியில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த கிளாடியஸ் என்னும் மன்னனின் ஆட்சிக் காலத்தில் மக்கள் இராணு வத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான்.இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.  மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள்  சிறையி லடைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

காதலுக்கு ஆதரவு தெரிவித்ததன் விளைவால் உயிரிழந்த ஒரு பாதிரியாரின் நினைவுநாள் தான் காதலர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
வியாபார நிறுவனங்கள் அந்த நாளுக்காக காதலர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி தங்களின் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்கின்றன.
காதலர் தினத்தில் என்னதான் செய்வார்கள்? என்று நண்பர்கள் சிலரிடம் கேட்டபோது, தனக்கு ஒரு காதலியோ, காதலனோ இருப்பதை மற்றவர்களுக்கு பிரகனப்படுத்துவார்கள். பரிசு பொருட்களைக் கொடுத்து தங்களை விட்டு ஓடி விட கூடாது என்று கவனமாக இருப்பர். அன்று முழுவதும் டுவீலரில் அட்டைப் பூச்சிகளைப் போல் ஒட்டி உரசி, காண்பவர் கண்கள் கூசும் அளவிற்கு உரெல்லாம் சுற்றி கொட்டமடிப்பர். காதலில் தோற்றதாக கூறிக் கொள்பவர்களோ தங்களின் உடைந்து போன காதலை நினைத்து ஏங்குவர் என்று தெரிவித்தனர்.
இப்படி ஒரு நாள் தேவைதானா என இளைய சமுதாயம் சற்று சிந்திக்க வேண்டும்.
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும், பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார். (ஆதியாகமம்-1:27)
இறைவன் மனிதனை உலகில் படைத்தபோது அவனை மகிழ்ச்சியாய் வாழ வைக்கவே விரும்பினார். அதனால் தான் மனிதன் தனித்து இருப்பது நல்லதல்ல. அவனுக்கு ஓர் துணையை உருவாக்க வேண்டும் என்று நினைத்து, அவனின் விலா எலும்பிலிருந்து பெண்ணை உருவாக்கி தந்தார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயம் ஒர் துணை உண்டு. அதைத்தான் தேவனும் நிர்ணயித்திருக்கிறார். நீங்களாக உங்கள் வாழ்க்கைக்கு ஒத்துவராத ஒருவரை துணையாக தேடாதிருங்கள்.  வாழ்க்கையில் சரியான ஒரு துணையை கடவுள் ஏற்படுத்தி தரும் வரை காத்திருங்கள்.
காதல் என்ற புதைகுழியில் விழுந்து மீண்டவர்களை விட மாண்டவர்களே அதிகம் நினைவில் கொள்ளுங்கள்.
வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக