வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. !

04 ஆகஸ்ட் 2011

தொடரட்டும் சீரிய பணி...




தமிழகத்தில் இன்று மக்களால் அதிகமாக பேசப்படும் விஷயம் கல்வி தொடர்பானதுதான். புதிய ஆட்சி பெறுப்பேற்றதிலிருந்து பெற்றோரும், மாணவர்களும் இந்த விஷயத்தில்தான் மிகுந்த குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
ஒரு பக்கம் கல்விக் கட்டணம், இன்னொரு பக்கம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி.
கல்விக் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டு அந்த குழு அளித்த பரிந்துரை ஏற்கப்பட்டும், ஏற்கப்படாலும் இருக்கும் நிலையில் பள்ளிகள் அறிவித்த கட்டணத்தை பெற்றோர் செலுத்தினர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகி விடக் கூடாது என்று.
கல்வி கட்டண நிர்ணய குழு பரிந்துரைத்த கட்டணத்தை வைத்துக் கொண்டு பள்ளிகள் நடத்த முடியாது என்று தனியார் பள்ளிகள் தரப்பிலிருந்து குரல்கள் எதிரொலிக்கின்றன. இந்த கட்டணம் அதிகம் என்று மாணவர்கள் சார்பில் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தனியார் பள்ளிகளில் பெற்றோர் வாக்குவாதத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது சில தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் பெற்றோரைப் பார்த்து, கட்டணத்தை செலுத்த முடியாவிட்டால் உங்கள் பிள்ளைகளை கார்ப்பரேஷன் ஸ்கூலில் சேர்த்து விடுங்கள். இங்கே ஏன் ஓடி வருகிறீர்கள்? என்று கேவலமாக கூறியுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்விலும், பிளஸ் டூ தேர்விலும் சில ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவ, மாணவியர்தான் மாநிலத்தில் முதலிடங்களை பிடித்திருக்கின்றனர். இருப்பினும் பெற்றோரின் அளவுக்கு மீறிய கௌரவம்தான் அரசு பள்ளிகளை கேவலமாக பார்க்க வைத்துள்ளது.
ஒரு சில  அரசு பள்ளிகளின் செயல்பாடுகளை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த அரசு பள்ளிகளும் சரியில்லை என்று எல்லோரும் நினைக்கின்றனர். இன்றும் சில அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன.

இந்த நிலையில் இன்று (04.08.2011) தினகரன் நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருந்ததை படிக்க நேரிட்டபோது என் மனம் நெகிழ்ந்தது.
சர்க்கரை நோய் பாதிப்பால் பார்வை பறிபோன பிறகும் பாடம் நடத்தும் ஆசிரியர்  என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் எம்.ஜார்ஜ். ஐம்பத்தி நான்கு வயதான இவருக்கு நீரிழிவு நோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்வை பறிபோனதாம். பல மருத்துவர்களிடம் காண்பித்தும் எந்த பலனும் ஏற்படவில்லையாம். பார்வை பறிபோனாலும் தான் ஏற்றுகொண்ட ஆசிரியர் பணியை விட்டு அவர்  ஒதுங்கி விடவில்லையாம். தற்போது 5-ஆம் வகுப்பு படிக்கும் 30 மாணவ, மாணவியருக்கு இவர் பாடம் நடத்தி வருகிறாராம்.
தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை நடத்தி வரும் இவரிடம் பயிலும் மாணவ, மாணவியரின் ஆங்கில உச்சரிப்பு, இலக்கண திறமை போன்றவை மற்ற மாணவ, மாணவியரை விட சிறப்பாக இருப்பதாக சக ஆசிரியர்கள் கூறுகின்றனராம்.
சமச்சீர் கல்வி பிரச்சினை காரணமாக மாணவ, மாணவியருக்கு ஆங்கில இலக்கண பாடம் நடத்தி வருகிறாராம்.
ஏற்றுகொண்ட பணியை சிறப்பாக செய்து வரும் ஆசிரியர் ஜார்ஜ், கடந்த 24 ஆண்டுகளாக அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக முதலில் வெள்ளெழுத்து ஏற்பட துவங்கியது. பார்வை நரம்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பார்வையை மீள செய்வது கடினம் என டாக்டர்கள் கூறி விட்டனர். இதனால் பஸ்சில் சென்று வருவது கடினம் என்பதால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதாக கல்வித்துறையிடம் அனுமதி பெற்று இங்கு பாடம் நடத்தி வருகிறேன். பாடத் திட்டம் மாறினாலும் என்னால் பாடம் நடத்த இயலும் என்று தன்னம்பிக்கையோடு கூறினாராம். (நன்றி.. தினகரன் நாளிதழ்)
இவரை போன்றே அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் பணிகளை அர்ப்பணிப்போடும், தியாக மனப்பான்மையோடும் செவ்வென செய்திருந்தால், தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை எப்போதோ தடுத்திருக்கலாம்.
இன்னும் காலம் கடந்து விடவில்லை.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். அம்மா, அப்பாவிற்கு பிறகு, தெய்வத்திற்கு முன்பு குருவிற்குதான் சிறப்பிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தை எத்தனை ஆசிரியர்கள் தக்க வைத்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கே வெளிச்சம்.
கிட்டதட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டன. ஆசிரியர்களும் தெய்வங்களாக மதிக்கப்பட்டனர். அவர்களும் தங்கள் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடும், தியாக மனப்பான்மையோடும் செய்தனர். இன்றைக்கும் அவர்களை நினைத்தால் மனம் மகிழ்கிறது. (8-ஆம் வகுப்பு வரை சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்தவன் நான்).
இடையில் காளான்களாய் பெருகி விட்ட தனியார் பள்ளிகள் இன்று கல்வியை காசுக்கு விற்கும் விற்பனை கூடங்களாக மாறியுள்ளதுதான் வேதனை.
ஆசிரியர் ஜார்ஜ் அவர்களின் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன்.
தொடரட்டும் அவரின் சீரிய பணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக